குருகிராம்: தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி சென்றவர்களிடம் மார்ச் மாதத்தில் ரூ.1.9 கோடியை வசூலித்துள்ளார் போக்குவரத்துக் காவலர்.
ஹரியானா மாநிலத்தில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகளில் உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்படுவதற்கு தலைக்கவசம் அணியாததே காரணமாக உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் பாதுகாப்பான பயணம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், குருகிராமில் போக்குவரத்து இணைக் கமிஷனராக பிரதீக் கெலாட் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற பிறகு சாலை விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி, மார்ச் மாதத்தில் மட்டும் போக்குவரத்துக் காவலர் ஒருவர், தலைக்கவசம் அணியாமல் சென்ற 19,603 பேருக்கு அபராதம் விதித்துள்ளார். அதில் ரூ.1.9 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குருகிராம் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சாலை விதிமீறலில் பெரும்பாலானவை தலைக்கவசம் அணியாமல் செல்வதாகவே உள்ளது. அதைக் கட்டுப்படுத்த இப்போது விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. பெரும்பாலான விபத்துகளில் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படுவதற்கு இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் இருப்பதே காரணமாக உள்ளது.
சாலைகளில் வாகனங்களை ஓட்டும் போது ஒரு ஒழுங்குமுறை, ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும். தற்போது விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இது வரும் மாதங்களிலும் தொடரும். அபராதம் மட்டுமே வாகன ஓட்டிகளிடம் மாற்றத்தை கொண்டு வராது.
எனவே, மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், ஆட்டோ - டாக்ஸி சங்கத்தினர், சாலை சந்திப்புகள், அலுவலகங்கள் போன்ற முக்கியமான இடங்களில் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து வருகிறோம். அதேபோல், சிறுவர்களிடம் வாகனங்களை கொடுக்காதீர்கள் என்று பெற்றோர்களை வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறினர்.