கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் புரூலியா மாவட்டத்தின் பலராம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்பெரா-கெருவா பகுதியில் மாவோயிஸ்ட் சுவரொட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.
வெள்ளை காகிதத்தில் சிவப்பு மையால் எழுதப்பட்ட இந்த சுவரொட்டிகளில் பாரம்பரிய மாவோயிஸ்ட் தகவல் தொடர்புகளை போன்ற முழக்கங்களும் செய்திகளும் இடம்பெற்றிருந்தன. சிபிஐ (மாவோயிஸ்ட்) என்ற பெயரில் அவை கையெழுத்திடப்பட்டிருந்தன.
ஜங்கல்மஹால் பகுதியில் முறையான சாலை வசதி, வேலைவாய்ப்பு, குடியிருப்புகள், வீடு ஒதுக்கீட்டு முறைகேடுகள் குறித்து விசாரணை போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தன.
மேலும் உள்ளூர் பஞ்சாயத்து பிரதிநிதிகள் மற்றும் ஒன்றிய அளவிலான அதிகாரிகளுக்கு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத மது விற்பனை மற்றும் வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக மரம் வெட்டுவதைத் தடுக்கக் கோரியும், வனத்துறை அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தும் சுவரொட்டிகள் காணப்பட்டன.
போலீஸாரும் மத்திய பாதுகாப்பு படையினரும் விரைந்து சென்று இந்த சுவரொட்டிகளை அகற்றினர். இதன் உண்மைத் தன்மை குறித்தும் இதற்குப் பின்னணியில் இருப்பவர்கள் பற்றியும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த விவகாரத்தை பாதுகாப்பு படையினர் தீவிர அச்சுறுத்தலாக கருதி, அப்பகுதியில் ரோந்துப் பணி மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.