பிலாஸ்பூர்: சத்தீஸ்கரில் உறவினருக்கு ஜாமீன் பெற, தலைமை நீதிபதி படத்துடன் மயானத்தில் மாந்திரீகம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற கத்திக்குத்து வழக்கு ஒன்றில் பிரியான்ஷு போலே என்பவரும் அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் ஒருவருக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், பிரியான்ஷுவின் மனு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. ஆன்லைனில் போலிச் சாமியார் ஒருவரின் வீடியோவை பிரியான்ஷு போலேவின் உறவினரான ரிஷிகேஷ் குமார் பார்த்தார்.
மாந்திரீக பூஜை செய்தால் ஜாமீன் கிடைக்கும் என்று அவர் நம்பினார். அதனால், தன்னுடன் இருந்த மூவருடன் சேர்ந்து மயானத்தில் பூஜை செய்யத் திட்டமிட்டார். அதன்படி, அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைக்கு இடைப்பட்ட நள்ளிரவில் சீபத் காவல் எல்லைக்குட்பட்ட தேவாரி கிராம மயானத்துக்குச் சென்றனர். அங்கு சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா, பிரியான்ஷு மற்றும் பாதிக்கப்பட்டவரின் புகைப்படங்களை வைத்தனர்.
அதனுடன் மீன், எலுமிச்சம்பழம் மற்றும் குங்குமம் ஆகியவற்றை வைத்து மாந்திரீகச் சடங்கு செய்யத் தொடங்கினர். மயானத்தில் நள்ளிரவில் சந்தேகப்படும்படி நின்றவர்களைக் கிராம மக்கள் தட்டிக்கேட்டனர். அப்போது ரிஷி கேஷுடன் வந்த மூவர் தப்பியோட, ரிஷிகேஷ் மட்டும் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பிலாஸ்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜனேஷ் சிங் தலைமையிலான காவல் துறையினர், ரிஷிகேஷ் குமாரைக் கைது செய்து மயானத்தில் இருந்த மாந்திரீகப் பொருட்களைப் பறிமுதல் செய்ததுடன், தப்பியோடிய மற்ற மூவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.