நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் 20,000 வீரர்கள் குவிப்பு

நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் 20,000 வீரர்கள் குவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: நாட்டின் 80-வது சுதந்திர தினம் ஆக.15-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி உரையாற்றுகிறார். அதற்காக சுமார் 20,000 பாதுகாப்புப் படையினருடன் தலைநகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை 15-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாட மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி சிறப்புரையாற்றுகிறார். அதை முன்னிட்டு டெல்லி செங்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெல்லி காவல் துறையின் பல்வேறு பிரிவுகள், துணை ராணுவப் படைகள், கமாண்டோக்கள், ‘ஹிட் டீம்’ எனப்படும் சிறப்புப் படைகள் மற்றும் என்எஸ்ஜி துப்பாக்கிச் சுடும் வீரர்கள் (ஸ்னைப்பர்கள்) உட்பட சுமார் 20,000 வீரர்கள் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய வடக்கு டெல்லி காவல் துணை ஆணையர் ராஜா பந்தியா, உள்ளூர் காவல் அமைப்புகள், போக்குவரத்துப் பிரிவு, தேசியப் பேரிடர் மீட்புப் படை மற்றும் கண்காணிப்புக் கோபுரங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள விரைவு அதிரடிப் படைகள் என அனைத்துப் பிரிவுகளும் முழு தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

நவீன தொழில்நுட்ப அம்சமாக, செங்கோட்டைப் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தனிக் கட்டுப்பாட்டு அறைகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. அத்துடன், முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் (எப்ஆர்எஸ்), வாகன எண் பலகையைக் கண்டறியும் முறை, ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் சமூக வலைதளக் கண்காணிப்பு எனப் பல அடுக்குத் தொழில்நுட்ப வளையத்துக்குள் அப்பகுதி கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி அதிகாலை 4 மணி வரை, ‘சுதர்ஷன் சக்தி-5’ என்ற ஐந்தாம் கட்ட கூட்டுத் தடுப்பு மாதிரிப் பயிற்சியை டெல்லி காவல் துறையும், என்எஸ்ஜி படையும் இணைந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், ஐஎஸ்பிடி காஷ்மீரி கேட், செங்கோட்டை மெட்ரோ நிலையம், பால்காஜி கோயில் மற்றும் கன்னாட் பிளேஸ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளன.

நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் 20,000 வீரர்கள் குவிப்பு
தமிழகத்தில் சைபர் மோசடிக்கு உதவிய 837 பேர் கைது: 48 மணி நேரம் சிறப்பு அதிரடி நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in