குருகிராம்: ஷரியா சட்டத்தை முன்னிறுத்தி ரூ.6,000 கோடி மோசடி செய்த ஹைதராபாத் பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஆலிமா நவ்ஹேரா ஷேக் (52). இவர் ஹீரா குழும நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டார். இந்த நிறுவனம் தங்க நகை வியாபாரம், ஜவுளி, கிரானைட், சுற்றுலா, ரியல் எஸ்டேட், இணைய வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக ஆலிமா விளம்பரம் செய்தார்.
மேலும் முஸ்லிம்களின் ஷரியா சட்டத்தின்படி வட்டி பெறுவது குற்றம் ஆகும். ஆனால் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் வட்டி கொடுக்க மாட்டோம். அதற்கு பதிலாக ஆண்டுக்கு 36% ஈவுத் தொகையை வழங்குவோம் என்று ஆலிமா கூறினார்.
அவரது விளம்பர உத்தியில் மயங்கிய சுமார் 1.75 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் ரூ.6,000 கோடிக்கும் அதிகமாக ஹீரா குழும நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் வாக்குறுதி அளித்தபடி முதலீட்டாளர்களுக்கு ஈவுத் தொகை வழங்கப்படவில்லை. முதலீட்டாளர்கள் வழங்கிய தொகையை தனது சொந்த கணக்குகளுக்கு மாற்றிய ஆலிமா, ஹைதராபாத் உட்பட பல்வேறு இடங்களில் சொத்துகளை வாங்கி குவித்தார்.
ஆலிமாவால் ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் ஹைதராபாத் உட்பட நாடு முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதன்பேரில் அவரது சொத்துகள் முடக்கப்பட்டன.பல்வேறு வழக்குகளில் அவர் ஜாமீன் பெற்றார். தெலங்கானாவின் வாரங்கல் போலீஸ் நிலையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஆலிமா மீது தங்க முதலீடு மோசடி தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை விசாரித்த வாரங்கல் நீதிமன்றம், ஆலிமாவை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்தது. ஆனால் அவர் தலைமறைவானார். மற்றொரு வழக்கில் ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றமும் ஆலிமாவை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்தது. நீதிமன்றங்கள் பிறப்பித்த கைது வாரன்டுகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆலிமா மேல்முறையீடு செய்தார்.
ஆனால் அவரது மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்த சூழலில் ஹரியானாவில் அவர் பதுங்கி இருப்பதாக அமலாக்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தெலங்கானா, ஹரியானா போலீஸாருடன் இணைந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆலிமாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.