டேராடூன்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்தவர் கவுரவ் குமார் (42). இவர் தன்னை ராகுல் காந்தியின் உதவியாளர் என்றும், தன்னால் தேர்தலில் சீட், கட்சிப் பதவி வாங்கிக் கொடுக்க முடியும் என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் உத்தராகண்ட் மாநில காங்கிரஸ் நிர்வாகியான பாவனா பாண்டே என்பவரிடம் ரூ.25 லட்சத்தை கவுரவ் குமார் பெற்றுள்ளார். அவருக்கு ராகுல் காந்தியிடம் கூறி தேர்தலில் சீட் பெற்றுத் தருவதாக ஏமாற்றியுள்ளார்.
தன்னிடம் கனிஷ்க் சிங் என்ற பெயரில் அவர் அறிமுகமாகி பணத்தை ஏமாற்றியுள்ளதாக டேராடூன் போலீஸில் பாவனா பாண்டே புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து கவுரவ் குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் இதேபோல் கோவா, உத்தராகண்ட், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களிலும் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.