கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.
இதையடுத்து, அக்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர். குறிப்பாக, மொத்தம் உள்ள 80 எம்எல்ஏ-க்களில் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் சுமார் 60 பேர் பிரிந்து சென்று நாங்கள்தான் உண்மையான திரிணமூல் என்று பேரவையில் அறிவித்துக் கொண்டனர்.
இந்நிலையில், மம்தா பானர்ஜியின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான மதன் மித்ரா நேற்று ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தியாளர்கள் முகாமில் இணைந்தார்.
நகராட்சிப் பணி நியமன ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில், மதன் மித்ராவின் மனைவி மற்றும் அவரது இரு மகன்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய அடுத்த நாளே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. மதன் மித்ராவின் விலகல் மம்தாவுக்குப் பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.