கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களுள் ஒருவரான ஹுமாயூன் கபீர், முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி கட்டப் போவதாக அறிவித்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர், ஆம் ஜனதா உன்னாயன் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.
இந்நிலையில் ஹுமாயுன் கபீர் நேற்று அளித்த பேட்டி: முஸ்லிம்களை பாதுகாப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர் முதல்வர் மம்தா. 3 முறை தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்தபோதும், அவர் முஸ்லிம்களுக்காக எதையும் செய்யவில்லை. முஸ்லிம் வாக்காளர்களை அவர் புறக்கணித்து வருகிறார்.
முஸ்லிம்களிடமிருந்து வாக்குகளைப் பெற்று முதல்வரான பின்னர், அவர் இந்துக்களுக்கான கோயில்களை மட்டுமே கட்டி வருகிறார். ஜெகன்னாத் தாம், ரஜார்ஹட் பகுதிகளில் கோயில்கள் கட்டினார் மம்தா. தற்போது ரஜார்ஹாத் பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இடத்தில் துர்கா கோயிலை கட்டி வருகிறார். இதைக் கேட்டதற்காக நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன்.
எனவே, நான் ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் இணைந்து தேர்தலில் களம் காண்கிறேன். திரிணமூல் காங்கிரஸையும், பாஜகவையும் எதிர்த்துப் போராடுவேன். மம்தா பானர்ஜியை மீண்டும் ஆட்சிக்கு வர விடமாட்டோம்.
தற்போது பெண்களுக்கு லஷ்மி பந்தர் திட்டத்தின் கீழ் ரூ.1,500 வழங்கப் போவதாக மம்தா அறிவித்துள்ளார். நான் பெண்களுக்காக ரூ.3,500 வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளேன். எனவே, எனக்கு முஸ்லிம் வாக்காளர்கள் பெருமளவில் ஆதரவு தருவர். நாங்கள் அமோக வெற்றி பெறுவோம். இவ்வாறு ஹுமாயுன் கபீர் தெரிவித்தார்.