கொல்கத்தா: கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா, பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து பவானிப்பூர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் மம்தா வெற்றி பெற்று முதல்வராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இந்தத் தேர்தலில் மீண்டும் அவர் பவானிப்பூர் தொகுதியில் களமிறங்குகிறார். இதைத் தொடர்ந்து கடந்த தேர்தலைப் போலவே, இந்தத் தேர்தலிலும் மம்தாவுக்கு நெருக்கடி தர பாஜக மேலிடம் ஆயத்தமாகி வருகிறது.
இம்முறையும், முதல்வர் மம்தாவை எதிர்த்து களமிறங்க சுவேந்து அதிகாரி முடிவு செய்துள்ளார். ஆரம்பம் முதல் திரிணமூல் காங்கிரஸில் இருந்தவர்தான் இந்த சுவேந்து அதிகாரி. 2021-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக மம்தாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். 2021 முதல் மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவராக நீடித்து வருகிறார்.
2021 பவானிப்பூர் இடைத்தேர்தலில் மம்தா போட்டியிட்டு 71% வாக்குகளை அள்ளினார். பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவாலை விட 58 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி கண்டார். எனவே, இந்தத் தேர்தலிலும் அவர் எளிதாக வெற்றி பெறுவார் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதேநேரத்தில் மம்தாவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட பாஜக தொண்டர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இதனிடையே, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது இந்தத் தொகுதியிலிருந்து 40 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டனர். உயிரோடு இருக்கும் பலரின் வாக்குகளை தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டது என்று திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இருந்தபோதும் சிறுபான்மையினரின் ஆதரவுடன் மம்தாவை வெற்றி பெறச் செய்ய திரிணமூல் காங்கிரஸார் கங்கணம் கட்டி களத்தில் குதித்துள்ளனர்.