மம்தா பானர்ஜி | கோப்புப் படம்

 
இந்தியா

“உயிர்களுக்கும் ஆபத்து” - எஸ்ஐஆர் பணியை நிறுத்தக் கோரி தேர்தல் ஆணையருக்கு மம்தா கடிதம்

பால. மோகன்தாஸ்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகள் மீண்டும் மீண்டும் கவலைகளை ஏற்படுத்தி, அது தற்போது ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதால், இது குறித்து கடிதம் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் திட்டமிடப்படாமலும் ஆபத்தான முறையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், முதல் நாளில் இருந்தே அதன் செயல்முறை முடங்கியுள்ளது.

அடிப்படை தயார் நிலை, போதுமான திட்டமிடல், தெளிவான தகவல் தொடர்பு இல்லாமல், அதிகாரிகள் மீதும் பொதுமக்கள் மீதும் எஸ்ஐஆர் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் திணித்துள்ளது. அதிகாரிகளுக்கு போதுமான பயிற்சி அளிக்கப்படாதது, கட்டாய ஆவணங்கள் குறித்த குழப்பம், வேலை நேரத்தில் பிஎல்ஓ-க்கள் வாக்காளர்களைச் சந்திப்பது ஆகியவை, இந்த நடவடிக்கை முழுவதையும் கட்டமைப்பு ரீதியாக பொருத்தமற்றதாக ஆக்கியுள்ளது.

எனவே, தற்போதைய நடைமுறையை நிறுத்துவது, கட்டாயப்படுத்துவதை நிறுத்துவது, சரியான பயிற்சி மற்றும் ஆதரவை வழங்குவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு தற்போதைய செயல்முறையை முழுமையாக மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதை தாமதமின்றி செய்யாவிட்டால், அரசு அமைப்பு, அதிகாரிகள் மற்றம் குடிமக்களுக்கு ஏற்படும் விளைவுகள் மீள முடியாததாக இருக்கும். பொறுப்புணர்வுடனும், மனிதநேயத்துடனும், தீர்க்கமான உணர்வுடனும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிஎல்ஓ-க்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பணிச் சுமை, மனித வரம்புகளுக்கு அப்பாற்பட்டது. அவர்கள் தங்கள் முக்கிய கடமைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறார்கள். அவர்களில் பலர் ஆசிரியர்களாகவும், முக்கிய அதிகாரிகளாகவும் இருக்கிறார்கள். அதேநேரத்தில் அவர்கள்தான் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புகளை நடத்துகிறார்கள், சிக்கலான மின் சமர்ப்பிப்புகளை கையாளுகிறார்கள். பயிற்சி இல்லாமை, சர்வர் செயலிழப்பு, தரவு பொருந்தாமை போன்ற காரணங்களால் ஆன்லைன் படிவங்களுடன் அவர்கள் போராடுகிறார்கள். இதன் விளைவு, நிர்வாக ஸ்தம்பிப்பை ஏற்படுத்தும்.

இந்த வேகத்தில் டிச.4-ம் தேதிக்குள் பல தொகுதிகளில் வாக்காளர் தரவை துல்லியமாக பதிவேற்ற முடியாது என்பது கிட்டத்தட்ட உறுதி. அதிகப்படியான அழுத்தம் காரணமாகவும், தண்டனைக்குப் பயந்தும் பிஎல்ஓ-க்கள் தவறான, முழுமையற்ற உள்ளீடுகளை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், உண்மையான வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம் உள்ளது. அதோடு, வாக்காளர் பட்டியலின் தரத்தை சீர்குலைக்கும்.

மேற்கு வங்கத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் நெல், உருளைக்கிழங்கு அறுவடைப் பணிகளில் உள்ளனர். அவர்கள், எஸ்ஐஆர் கணக்கெடுப்பில் பங்கேற்க தங்கள் விவசாயப் பணிகளை கைவிடுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. எஸ்ஐஆர் பணி அழுத்தம் காரணமாக அங்கன்வாடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தப் பணி தொடங்கியதில் இருந்து பலர் உயிரிழந்துள்ளனர். திட்டிடப்படாத, கட்டாயப்படுத்தும் இந்தப் பணி, உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது. மேலும், தேர்தல் திருத்தத்தின் நியாயத்தன்மைக்கே ஆபத்தை விளைவிக்கிறது. எனவே, இந்த நடவடிக்கையை மேற்கு வங்கத்தில் உடனடியாக நிறுத்த வேண்டும்” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT