புதுடெல்லி: மேற்குவங்கத்தில் ஊடுருவல்காரர்களை காப்பாற்ற முதல்வர் மம்தா முயற்சிக்கிறார் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டி உள்ளார்.
மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தில், “வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி முறையாக திட்டமிடப்படவில்லை. இது மிகுந்த குழப்பம் நிறைந்ததாக இருக்கிறது. திருத்தப் பணியால் பொதுமக்கள் தங்களின் வாக்குரிமையை இழக்க நேரிடும். பணிச்சுமை காரணமாக தேர்தல் அலுவலர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். எனவே எஸ்ஐஆர் பணியை நிறுத்த வேண்டும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “இந்தியாவின் பாதுகாப்பு மட்டுமன்றி ஜனநாயகத்தை காப்பாற்ற வெளிநாட்டினர் ஊடுருவலை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம். ஆனால் சில அரசியல் கட்சிகள் (மம்தா) ஊடுருவல்காரர்களை காப்பாற்ற முயற்சி செய்கின்றன. அந்த கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகையில், ‘‘வங்கதேசத்தில் இருந்து ஏராளமானோர் மேற்குவங்கத்துக்குள் ஊடுருவி உள்ளனர். தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெறுவதால் வங்கதேச மக்கள் அச்சமடைந்து சொந்த நாட்டுக்கு தப்பிச் செல்ல தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இந்தியாவில் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடாத நபர்கள் மட்டும் வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்’’ என்றனர்.