மம்தா பானர்ஜி

 
இந்தியா

“பாஜகவின் ‘இறுதி ஆட்டம்’தான் கருத்துக் கணிப்பு முடிவுகள்” - மம்தா பானர்ஜி ஆவேசம்

தமிழினி

புதுடெல்லி: “மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 226-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்” என அம்மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “மேற்கு வங்கத்தில் மே 4-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, திரிணமூல் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும்.

தேர்தலுக்குப் பிந்தையை கருத்துக் கணிப்புகளை நிராகரிக்கிறோம். இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தும் பாஜக அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டவை. இவை அனைத்தும் புனையப்பட்டவை. திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களின் மன உறுதியைக் குலைக்கும் நோக்கத்துடன் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

பாஜக தனது இறுதி ஆட்டத்தையும் ஆடிவிட்டது. உண்மையான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டு இருந்தால், பங்குச் சந்தைகள் சரிந்திருக்கும். இந்தக் கணிப்புகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று எனக்கு உளவுத் துறை தகவல்கள் கிடைத்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைவரும் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும். 294 தொகுதிகளிலும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களை வேட்பாளர்களும் மூத்த தலைவர்களும் நேரில் சென்று கண்காணிக்க வேண்டும்

நான் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் வரை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை விட்டு யாரும் வெளியேறக் கூடாது.

திரண்டு வந்து வாக்களித்த வாக்காளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் (பாஜக) ஏதாவது வன்முறையைக் கட்டவிழ்த்தால் உடனடியாகப் பதிலடி கொடுக்காதீர்கள். அமைதியையும் நிதானத்தையும் கடைபிடியுங்கள்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 226-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கருத்துக் கணிப்புகள் கூறுவது என்ன?

மேட்ரிஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் மேற்கு வங்கத்தில் பாஜக 146 முதல் 161 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 125 முதல் 140 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

பி-மார்க் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக அணி 150 முதல் 175 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 118 முதல் 138 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் திரிணமூல் காங்கிரஸ் 177 முதல் 187 இடங்களையும், பாஜக அணி 95 முதல் 110 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT