மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக நேற்று தக் ஷின் தினாஜ்பூர் வந்த முதல்வர் மம்தா பானர்ஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நடனக் கலைஞர்களுடன் மம்தா கலந்துரையாடினார். படம்: பிடிஐ
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பிரபலமான மீன் உணவு வகைகளுக்குத் தடை விதிக்கப்படலாம் என்ற பிரச்சாரத்தை முதல்வர் மம்தா பானர்ஜி முன்னெடுத்து வருகிறார்.
“நமது மாநிலத்தில் பெரும்பாலான வியாபாரிகள் சாலையோரங்களில்தான் மீன்களை விற்க முடியும். இவர்கள் ஆட்சிக்கு வந்தால், உரிமம் பெற்று ஷாப்பிங் மால்களில் மட்டுமே விற்பனை செய்ய முடியும். அதுபோன்ற நிலை நமக்கு வேண்டுமா? எனவே, பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது. அதற்காகவே, திரிணமூல் காங்கிரஸுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்று மம்தா பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில் மேற்கு வங்கத்துக்கு சுற்றுலாப் பயணிகள் தாராளமாக வரலாம் என்றும், மீன் உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடலாம் என்றும் திரிணமூல் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது: மேற்கு வங்கத்துக்கு சுற்றுலாப்பயணிகள் வரலாம். அவர்கள் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் பரிமாறப்படும் சுவையான அசைவ உணவுகளை சாப்பிடலாம்.
பிரபலான முரி கோண்டா, பாப்டா மச்சர் ஜல், லிஷ் பாப்பா, சிங்ரி மலாய் கறி, பேட்கி படூரி, கோஷா மாங்ஷோ உள்ளிட்ட உணவு வகைகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம். நீங்கள் மேற்கு வங்கத்தில் தங்கும் நாட்கள் இனிமையாக அமையட்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.