மஹுவா மொய்த்ரா
புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் மஹுவா மொய்த்ரா. மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் துடிப்பான எம்.பி.யாக இருக்கிறார். இவரது பேச்சுகள் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதுண்டு.
சமீபத்தில் மஹுவா மொய்த்ரா செய்தியாளர்களிடம் பேசும் போது, ‘‘சுதந்திரப் போராட்டத்தில் வங்காள மக்களின் பங்களிப்போடு ஒப்பிடுகையில், குஜராத் மக்களின் பங்களிப்பு எத்தகையது? ‘காலாபானி' (அந்தமான் சிறை) தண்டனை பெற்றவர்களில் எத்தனை பேர் குஜராத்திகள்?’’ என்று கேள்வி எழுப்பினார். இதனால் முதல்வர் மம்தாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க தேர்தலில் பவானிபூர் தொகுதியில் மம்தா போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் பெங்காலி பேசும் மக்களை விட குஜராத்திகள் மற்றும் மார்வாரிகள்தான் அதிகம். இதனால் மஹுவா பேச்சால் முதல்வர் மம்தா கோபம் அடைந்துள்ளார்.
பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 2-வது முறை போட்டியிட்டு வெற்றி பெறும் நோக்கில் தேர்தலில் மம்தா களமிறங்கி உள்ளார். இந்நிலையில், சொந்தக் கட்சி எம்.பி. மஹுவாவின் பேச்சு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கோபத்தில் இருக்கிறார் மம்தா.
பவானிப்பூர் மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் குஜராத்திகள், மார்வாரிகள் மற்றும் பிஹாரிகள். இந்நிலையில், மஹுவாவின் பேச்சால் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க குஜராத்தி மற்றும் மார்வாரி மக்களுடன் நட்புடன் பழகி அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்களை மம்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு, ‘காளி தேவி மாமிசம் உண்பவர்’ மற்றும் ‘மது அருந்துபவர்’ என்று மஹுவா பேசினார். 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்காகப் பணம் மற்றும் பரிசுகளைப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.