புதுடெல்லி: மகாராஷ்டிராவில் பிரபல ரவுடி பாபா ஃபர்சானின் ஆடம்பர பங்களாவில் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 1990-களில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் பாபா ஃபர்சான். கட்டப் பஞ்சாயத்து, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் நில தகராறுகளைத் தீர்ப்பது உள்ளிட்ட சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கொலை முயற்சி, ஆட்கடத்தல், கலவரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் உடல்நலக்குறைவு மற்றும் முதுமை காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஃபர்சான் காலமானார். அவருக்கு சொந்தமான பங்களா மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் குற்றப் பிரிவு காவல் துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ஃபர்சானின் 2-வது மனைவி ஷீலா கணபத்ராவ் சால்வே (52) அங்கு இருந்தார்.
இந்த சோதனையில், மொத்தம் ரூ.5,26,29,560 கணக்கில் வராத ரொக்கப் பணத்தை அதிகாரிகள் கண்டெடுத்தனர். இதில் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளும், சிறிய கட்டுகளாகக் கட்டப்பட்டிருந்த பெருமளவிலான ரூ.50, ரூ.20 மற்றும் ரூ.10 நோட்டுகளும் அடங்கும். துல்லியமான தொகையைக் கணக்கிட அதிகாரிகள் ஐந்து பணம் எண்ணும் இயந்திரங்களைக் கொண்டுவர வேண்டியிருந்தது.
மேலும், அந்த வீட்டில் ரூ.5,50,000 மதிப்புள்ள பெருமளவிலான ஆயுதங்களையும் அவர்கள் கண்டெடுத்தனர். இதில் மேகசின்களுடன் கூடிய 2 பிஸ்டல்கள், 4 துப்பாக்கிகள், 12-போர் துப்பாக்கிகள், 2 ஏர் துப்பாக்கிகள், ஒரு.22 துப்பாக்கி, ஒரு வாள், 17 வகையான கத்திகள் மற்றும் 21 இதர கூர்மையான ஆயுதங்கள் இருந்தன.
முதற்கட்ட விசாரணையில், 12-போர் மற்றும் 0.22 மிமீ துப்பாக்கிகள், ஒரு பிஸ்டல் மற்றும் ஒரு ரிவால்வர் ஆகியவற்றுக்கான உரிமங்கள் பாபா ஃபர்சானின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
ஃபர்சானின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட நிதி ஆவணங்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் பினாமி சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் மூலம், 1990-களின் பல தீர்க்கப்படாத குற்றவியல் வழக்குகளின் பின்னணிகளை வெளிக்கொண்டு வர முடியும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.