இந்தியா

மகாராஷ்டிரா: நீட் மறுதேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மாணவி தற்கொலை

மோகன் கணபதி

மும்பை: நீட் மறுதேர்வால் மனமுடைந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த 19 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் கர்ஜத் தாலுக்காவில் உள்ள ஜலால்பூர் கிராமத்தைச் சேர்ந்த அங்கிதா சுரேஷ் சங்கலே என்ற மாணவி, கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுதியுள்ளார். தேர்வுக்குப் பிறகு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் வகையில் நல்ல மதிப்பெண் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருந்துள்ளார்.

எனினும், வினாத்தாள் கசிவு காரணமாக அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறு தேர்வு ஜூன் 2-ம் தேதி நடைபெற்றது. மறு தேர்வை அங்கிதா எழுதியுள்ளார். நீட் தேர்வில் 300க்கும் மேற்பட்ட மதிப்பெண்களை அங்கிதா பெறுவார் என அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் 166 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளார். இது அவரது பிரிவினருக்கான கட் ஆஃப் மதிப்பெண் ஆன 177-க்கு 11 மதிப்பெண்கள் குறைவு.

தனது மதிப்பெண் வெளியானதை அடுத்து அங்கிதா கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாயியான அங்கிதாவின் தந்தையும், தம்பியும் கடந்த சனிக்கிழமை, ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு பண்டரிபுரம் கோயிலுக்குச் சென்றுள்ளனர். வீட்டில் அங்கிதாவும் அவரது தாயாரும் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது அங்கிதா தனது அறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதி வைத்ததாகக் கூறப்படும் கடிதத்தில், ‘உங்கள் நம்பிக்கையை நிறைவேற்ற முடியாததற்காக மன்னிப்புக் கோருகிறேன். எனது மரணத்துக்கு உங்களை நீங்களே குறை கூறிக் கொள்ள வேண்டாம்’ என தெரிவித்துள்ளார். மேலும், பெற்றோரை நன்றாகப் பார்த்துக்கொள்ளுமாறு தனது சகோதரரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து தெரிவித்த கர்ஜத் காவல் ஆய்வாளர் ஹனுமன் கெய்க்வாட், “முதற்கட்ட விசாரணையும், மாணவி எழுதியுள்ள கடிதமும் நீட்-யுஜி தேர்வில் தனது செயல்பாடு காரணமாக அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததைக் காட்டுகின்றன. நாங்கள் தற்செயலான மரணம் என்ற சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை எழுதிய பிறகு அங்கிதா மிகுந்த நம்பிக்கையுடன் இருந்ததாகவும், எனினும், மறுதேர்வு எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அவர் மன ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரது மாமா அன்னா சங்கலே தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT