மும்பை: மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 286 நகராட்சி கவுன்சில்கள் மற்றும் நகரப் பஞ்சாயத்துகளில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று தொடங்கி நடந்து வருகிறது.
டிசம்பர் 2 அன்று 263 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 67.3 சதவீத வாக்குகளும், நேற்று 23 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 47.04 சதவீத வாக்குகளும் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மொத்தம் 214 உள்ளாட்சி அமைப்புகளில் முன்னிலை வகிக்கும் மகாயுதி கூட்டணியில், பாரதிய ஜனதா கட்சி 118 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 59 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 37 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாதி (எம்விஏ) தற்போது 49 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, இதில் காங்கிரஸ் கட்சி 32 இடங்களிலும், சரத் பவார் தலைமையிலான என்சிபி 9 இடங்களிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்த உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே மூன்று இடங்களை போட்டியின்றி கைப்பற்றியுள்ளது. இத்தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாகவே போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.