

கவுஹாத்தி: அசாமின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள நாம்ரூப்பில் புதிய பிரவுன்ஃபீல்ட் அம்மோனியா-யூரியா உரத் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜை செய்து இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டம் வடகிழக்கு பிராந்தியத்தில் தொழில்துறை மறுமலர்ச்சிக்கு முக்கிய உந்துதலாகவும், அப்பகுதிக்கு ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகவும் இருக்கும் என்று அவர் வர்ணித்தார்.
புதிய பிரவுன்ஃபீல்ட் அம்மோனியா-யூரியா உரத் திட்டம் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உரக் கழகம் லிமிடெட் (BVFCL) நிறுவனத்தின் தற்போதைய வளாகத்திற்குள்ளேயே அமைக்கப்பட உள்ளது. இதற்கு மதிப்பிடப்பட்ட முதலீடு ரூ.10,600 கோடிக்கும் அதிகமாகும். இந்த ஆலை அசாம் மற்றும் அண்டை மாநிலங்களின் உரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும், இறக்குமதி சார்பு நிலையைக் குறைக்கும், வேலைவாய்ப்பை உருவாக்கும், மேலும் பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமி பூஜை விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இன்று அசாம் மற்றும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களுக்கும் ஒரு மிகப்பெரிய நாள். நாம்ரூப் மற்றும் திப்ருகர் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த கனவு இன்று நிறைவேறுகிறது. இந்த முழுப் பகுதியிலும் தொழில்துறை முன்னேற்றத்தின் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கவிருக்கிறது. திப்ருகருக்கு வருவதற்கு முன்பு, கவுஹாத்தியில் விமான நிலையத்தின் புதிய முனையம் திறந்து வைக்கப்பட்டது. அசாம் ஒரு புதிய வளர்ச்சி வேகத்தை அடைந்துள்ளது என்று அனைவரும் கூறுகிறார்கள். நீங்கள் இப்போது அனுபவிப்பது ஒரு ஆரம்பம் மட்டுமே” என்றார்
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், இந்தத் திட்டம் பிராந்தியத்தின் உர உற்பத்தித் திறனை மேம்படுத்தும் என்று கூறினார். அவர், “வடகிழக்கு இந்தியாவின் பழமையான உர ஆலையான பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உரக் கழகம் லிமிடெட் (BVFCL), தொடங்கப்பட்டதிலிருந்து இப்பகுதி விவசாயிகளுக்கு சேவை செய்து வருகிறது. அதன் திறனை மேலும் அதிகரிக்க, நாம்ரூப் தளத்தில் நான்காவது ஆலை அமைக்கப்பட உள்ளது.
மத்திய அரசின் ஆதரவுடன் அமைக்கப்படும் இந்த புதிய ஆலை ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும். ஆண்டுக்கு 12.5 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்டதாக இருக்கும். இந்த ஆலை விரிவாக்கம் நாம்ரூப்பை ஒரு முக்கிய உற்பத்தி மையமாக மாற்றும். இந்த ஆலை வடகிழக்கு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு சேவை செய்வதுடன், மேற்கு வங்கம், பிஹாருக்கு விநியோகம் செய்யவும், பூடான் மற்றும் மியான்மருக்கு ஏற்றுமதி செய்யவும் வழிவகுக்கும்” என்று குறிப்பிட்டார்.