புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரைச் சேர்ந்த விவசாயி ரோஷன் குடே(29). இவருக்கு சுமார் 4 ஏக்கர் நிலம் உள்ளது. விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால், பால் பண்ணை வைக்க மாடுகளை வாங்கியுள்ளார்.
இதற்காக, உள்ளூர் கந்து வட்டிக்காரர்களிடம் கடந்த 2021-ம் தேதி ரூ.50,000 கடன் வாங்கியுள்ளார். அவர்களுக்கு வட்டியாக ரூ.7.5 லட்சம் வரை கொடுத்து வந்துள்ளார். எனினும், கடன் முடியவில்லை என கந்து வட்டிக்காரர்கள் மிரட்டியுள்ளனர். மேலும், ஒரு சிறுநீரகத்தை விற்று கடனை அடைத்து விடும்படி கந்து வட்டிக்காரர்களே யோசனை கூறியுள்ளனர். இதை ஏற்று அவர் தனது சிறுநீரகத்தை விற்று விட்டார்.
எனினும், மன உளைச்சலுக்கு ஆளான ரோஷன், சந்திரபூரின் பிரம்மபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கந்து வட்டிக்காரர்கள் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், மனித உறுப்பு கடத்தல் மற்றும் சட்டவிரோத கடன் வசூல் ஆகிய கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக சிறுநீரகத்தை விற்க இணையதளத்தில் ரோஷன் தகவல் தேடியுள்ளார். அதன் மூலம் முகவர் ஒருவர் தொடர்பு கொண்டு ரோஷனை கொல்கத்தாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவப் பரிசோதனைகள் முடிந்த பின்னர் அவரை கம்போடியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு ரோஷனின் சிறுநீரகம் அகற்றப்பட்ட பிறகு ரூ.8 லட்சம் வழங்கி உள்ளனர். இந்த வழக்கில் சந்திரபூரின் கந்து வட்டிக்காரர்கள் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன. இதுபோல், மகாராஷ்டிராவில் வேறு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.