அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார்
மும்பை: மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜித் பவார், கடந்த ஜனவரி மாதம் விமான விபத்தில் காலமானார். இதனால் அவருடைய பாராமதி சட்டப்பேரவைத் தொகுதி காலியானது.
அஜித் பவார் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி சுனேத்ரா பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவரானார். அத்துடன் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார். இந்நிலையில், பாராமதி தொகுதிக்கு வரும் 23-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுனேத்ரா போட்டியிடுகிறார்.
சுனேத்ரா பவார் சமீபத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, அவருக்கு ரூ.122 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இதன்மூலம் பவார் குடும்பத்தில் அதிக சொத்து மதிப்பு கொண்ட 2-வது நபராக இவர் உள்ளது தெரியவந்துள்ளது.
பாராமதி மக்களவை தொகுதி எம்.பி.யும் தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) கட்சியின் செயல் தலைவருமான சுப்ரியா சுலே ரூ.167 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். இது அவரது தந்தையும் அக்கட்சியின் தலைவருமான சரத் பவாரின் சொத்து மதிப்பை விட (ரூ.61 கோடி) கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகம்.