புதுடெல்லி: திருமணம் செய்து கொள்வதாகப் பொய்யான வாக்குறுதி அளித்து 14 பெண்களை ஏமாற்றிய வழக்கில் தேடப்பட்டு வந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த முகமது மாசின், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு உள்ளார்.
மகாராஷ்டிரா இளம்பெண் ஒருவர், முகமது மாசின் என்பவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக போலீஸாரிடம் புகார் அளித்தார். மாசின், தன்னை பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதோடு ரூ.18 லட்சத்தை வாங்கி மோசடி செய்ததாகவும் குறிப்பிட்டார்.
அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மாசின் இதே பாணியில் மேலும் 13 பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றி, அவர்களிடமிருந்து பணம் பறித்ததுடன், அந்தரங்க வீடியோக்களையும் பதிவு செய்து மிரட்டியது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்தபோது அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார். மாசினை கண்டுபிடித்துக் கைது செய்ய சிபிஐ, மத்திய வெளியுறவு அமைசகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் மகாராஷ்டிர காவல்துறை உதவி கோரியது. அதன் பேரில் சிபிஐ, டெல்லியில் உள்ள தனது தேசிய மத்திய பணியகம் மூலம், மாசினுக்கு எதிராக இன்டர்போல் ரெட் நோட்டீஸை பிறப்பித்தது.
இதனிடையே, மாசின் ஐக்கிய அரபு அமீரகத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் அவரது இருப்பிடத்தை்க் கண்டறிந்து கைது செய்தனர். பின்னர், உரிய சட்ட நடைமுறைகளின்படி, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்புதல் அளித்தனர். இதனையடுத்து, ஐக்கிய அரபு அமீரகம் சென்ற மகாராஷ்டிரா காவல்துறையின் தனிப்படையினர், மாசினை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர். பின்னர், அவருடன் நேற்று இந்தியா வந்தடைந்தனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த சிபிஐ அதிகாரிகள், அடுத்தகட்ட நடவடிக்கைகளை உடனடியாக தொடங்குவதாக கூறினர்.
இந்த ஆண்டில் 74 பேர்
வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் குற்றவாளிகளைப் பிடிக்க சிபிஐ அமைப்பு ‘இன்டர்போல்’ மற்றும் தனது ‘பாரத்போல்’ கட்டமைப்பு மூலம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், 2019-ம் ஆண்டு முதல் இதுவரை 300-க்கும் மேற்பட்ட தேடப்படும் குற்றவாளிகள் இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் 74 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.