இந்தியா

காங்., ஏஐஎம்ஐஎம் ஆதரவுடன் நகராட்சி தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி: மகாராஷ்டிர முதல்வர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

மும்பை: ம​கா​ராஷ்டிராவில் 2 நகராட்சி தலை​வர் தேர்​தலில், காங்​கிரஸ், ஏஐஎம்​ஐஎம் கட்​சிகளின் ஆதர​வுடன் வெற்றி பெற்​ற பாஜக வேட்பாளர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என அம்​மாநில முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் தெரி​வித்​து உள்​ளார்.

மகா​ராஷ்டி​ரா​வின் தானே மாவட்​டத்​தில், 60 உறுப்​பினர்​களைக் கொண்ட அம்​பர்​நாத் நகராட்​சிக்கு கடந்த டிசம்​பர் 20-ம் தேதி தேர்தல் நடை​பெற்​றது. இதில் சிவசேனா (உத்​தவ்) 27 இடங்​களில் வெற்றி பெற்​றது.பெரும்​பான்​மைக்கு 4 இடங்​கள் குறை​வாக இருந்தது. இந்​நிலை​யில், 14 இடங்​களில் வெற்றி பெற்ற பாஜகவைச் சேர்ந்த உறுப்​பினர் தேஜஸ்ரீ கரஞ்​சுலே பாட்​டீல், காங்கிரஸ் (12), தேசி​ய​வாத காங்​கிரஸ் (அஜித் பவார்) 4, 2 சுயேச்சைகள் ஆதர​வுடன் தலை​வர் தேர்​தலில் வெற்றி பெற்​றார்.

இது​போல 35 உறுப்​பினர்​களைக் கொண்ட அகோட் நகராட்​சித் தேர்​தலில், பாஜக 11 இடங்​களில் மட்​டுமே வெற்றி பெற்​றது. இந்நிலை​யில், அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் (2) உட்பட இதர கட்​சிகளின் ஆதர​வுடன் தலை​வர் பதவிக்​கான தேர்​தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்​றார்.

இதுகுறித்து முதல்​வரும் பாஜக மூத்த தலை​வரு​மான தேவேந்​திர பட்​னா​விஸ் கூறும்​போது, “நக​ராட்​சித் தலை​வர் தேர்​தலில் காங்​கிரஸ், ஏஐஎம்​ஐஎம் கட்​சிகளு​டன் கூட்டு சேர்ந்​ததை ஏற்றுக்கொள்ள முடி​யாது. இந்த விவ​காரத்​தில் தன்​னிச்​சை​யாக முடிவு எடுத்த உள்​ளூர் தலை​வர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்​றார்.

சிவசேனா (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ராவத் கூறும்போது, “அகோட் மற்றும் அம்பர்நாத்தில் நடந்தவை பாஜகவின் அற்பத்தனமான நடத்தையைக் காட்டுகின்றன. அதிகாரத்தைக் கைப்பற்ற அந்த கட்சி யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைக்கும்” என்றார்.

12 உறுப்​பினர்​கள் சஸ்​பெண்ட்: இந்​நிலை​யில், அம்​பர்​நாத் நகராட்சி தலை​வர் தேர்​தலில் பாஜக​வுக்கு ஆதர​வளித்த 12 உறுப்​பினர்​களை காங்​கிரஸ் கட்​சி சஸ்​பெண்ட்​ செய்​து உள்​ளது.

SCROLL FOR NEXT