போபால்: மத்திய பிரதேசத்தின் பர்ஹான்பூர் மாவட்டம் போர்சர் கிராமத்தில் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் அல்லது ஒரு மணி நேரம் கட்டாயத் துப்புரவுப் பணி என்ற விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முடிவு கிராம பஞ்சாயத்தால் ஒருமனதாக எடுக்கப்படுள்ளது.
இந்த விதிமுறை தொடர்பான சுவரொட்டிகள் கிராமம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. பொது நடத்தையை ஒழுங்குபடுத்தவும், தரக்குறைவான வார்த்தை பயன்பாட்டால் ஏற்படும் மோதல்களைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராமத் துணைத் தலைவர் வினோத் ஷிண்டே கூறுகையில், “குழந்தைகள், பெரியவர்கள் ஆகிய இரு தரப்பினர் மத்தியிலும் பரவலாக இழிவான சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
முன்பு தாய் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான இழிவான சொற்களை அடிக்கடி பயன்படுத்தினர். இப்போது, அவ்வாறு செய்பவர்கள் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும் அல்லது கிராமத்தில் ஒரு மணி நேரம் துப்புரவுப் பணி செய்ய வேண்டும்.
இந்த முயற்சி நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. கிராம மக்கள் தங்கள் வார்த்தைகளில் அதிக கவனத்துடன் இருக்கின்றனர். இந்த முயற்சிக்கு அண்டை கிராமங்களில் இருந்தும் பாராட்டுகள் கிடைத்துள்ளன" என்றார்.
இந்த கிராமத்து இளைஞன் அஷ்வின் பாட்டீல் கூறுகையில், “ம.பி.யில் இத்தகைய ஒரு முயற்சி எடுக்கப்பட்டது இதுவே முதல்முறை. கிராமத்தில் 12, 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பயன்படுத்தும் தகாத வார்த்தைகள் சில சமயம் பெரிய தகராறில் சென்று முடிகின்றன.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க எனக்கு இந்த யோசனை தோன்றியது. பிறகு ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் மற்றும் பிறருடன் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து ‘வசைமொழி இல்லா கிராமத்தை’ நிறுவும் முடிவு முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாங்கள் அனைவரும் இதற்கான உறுதிமொழியை ஏற்றுள்ளோம், மேலும் இந்த முயற்சி குறித்த முறையான சுற்றறிக்கையும் பஞ்சாயத்தால் வெளியிடப்பட்டுள்ளது” என்றார்.