ஸ்ரீநகர் தெற்கு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஜாகீர் அகமது கனாய் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவரது உடல் 3 நாட்களுக்குப் பிறகு நேற்று காலை மீட்கப்பட்டுள்ளது.
சோபியான் மாவட்டத்தின் சன்னாபோரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், கடந்த சனிக்கிழமை மாலை ஜம்மு-காஷ்மீர் போலீஸ், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது, தேடப்பட்டு வந்த ஜாகீர் மற்றும் அவரது கூட்டாளியான லத்தீப் ஆகிய இரு தீவிரவாதிகளின் நடமாட்டம் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தது.
பாதுகாப்புப் படையினர் கிராமத்திற்குள் சோதனையைத் தீவிரப்படுத்திய போது, அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் இருதரப்புக்கும் இடையே கடுமையான சண்டை வெடித்தது. இரவு நேரத்தைக் கருத்தில் கொண்டு அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது தீவிரவாதிகள் தப்பியோடியதாகக் கருதப்பட்ட நிலையில், அடுத்தநாள் கூட்டுப் படையினர் மீண்டும் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
அப்போது கிராமத்தில் உள்ள ஒரு மாட்டுத் தொழுவத்திலிருந்து திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் ஜாகீர் அகமது கனாய் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நேற்று காலை அவரது உடல் அங்கிருந்து மீட்கப்பட்டது. இந்த வெற்றிகரமான நடவடிக்கை குறித்து ஜம்மு- காஷ்மீர் காவல்துறை தனது எக்ஸ் தளப் பதிவில், “நீங்கள் ஓடலாம், ஆனால் ஒளிய முடியாது! சோபியான் சிறப்பு அதிரடிப்படை, ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் சிஆர்பிஎஃப் படையினருடன் இணைந்து நடத்திய தாக்குதல் நடவடிக்கையில் ஒரு லஷ்கர் தீவிரவாதி கொல்லப்பட்டார்” என்று குறிப்பிட்டுள்ளது.
காவல் துறைப் பதிவேடுகளின்படி காஷ்மீர் பள்ளத்தாக்கில் எஞ்சியிருந்த இரு உள்ளூர் தீவிரவாதிகளில் ஜாகீரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தப்பியோடிய மற்றொரு தீவிரவாதியான லத்தீப் என்பவரும் இதே பகுதியில் பதுங்கியிருக்கலாம் என நம்பப்படுவதால், பாதுகாப்புப் படையினர் தங்களது தேடுதல் வேட்டையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குல்காம் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்குப் பிறகு, இந்த ஆண்டில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் துப்பாக்கிச் சண்டை மற்றும் இதில் கொல்லப்பட்ட முதல் தீவிரவாதி ஜாகீர் அகமது கனாய் என்பது குறிப்பிடத்தக்கது.