புதுடெல்லி: பாகிஸ்தானின் பாதுகாப்பில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு, கடல்வழித் தாக்குதலுக்குத் திட்டமிட்டு வருகிறது. இதற்காக, அதன் தீவிரவாதிகளுக்கு கராச்சியிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சார்னா தீவில், சுற்றுலாப் போர்வையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அரபிக் கடலில், சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களின் எல்லைக்கு அருகில் சார்னா தீவு அமைந்துள்ளது. இது மக்கள் நடமாட்டம் மிகக் குறைவான ஒரு சிறிய பாறைத் தீவாகும். அந்தமான் நிக்கோபார் தீவுகளைப் போல, சார்னாவும் தெளிவான நீர், பவளப்பாறைகளைக் கொண்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் டைவிங் ஆர்வலர்களிடையே வணிக ரீதியான ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெலிங் (மூச்சுக்குழாய் நீச்சல்) மற்றும் நீர் விளையாட்டுகளுக்குப் பிரபலமான இடமாக உள்ளது.
எனவே, சுற்றுலா என்ற பெயரில் சார்னா தீவு, லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு மறைமுகத் தளமாக உருவாகி வருகிறது. ‘தாவா மெரைன் விங்’ (கடல்வழித் தாக்குதல் பிரிவு) அல்லது ‘சதா-ஏ-ஹுரியத்’ என்பதே லஷ்கர்-இ-தொய்பாவின் இந்தப் புதிய பிரிவின் பெயராகும். இப்பிரிவின் தீவிரவாதிகள் சார்னா தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் ஸ்கூபா டைவிங், போர்முறை நீச்சல் மற்றும் நீருக்கடியிலான செயல்பாடுகள் குறித்த பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர்.
இவற்றைச் சாதாரண சுற்றுலா டைவிங் நடவடிக்கையாகக் காட்டிக்கொள்வதால், பயிற்சியில் ஈடுபடுபவர்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுடன் எளிதாகக் கலந்துவிடுகின்றனர். ‘பாகிஸ்தான் மர்கசி முஸ்லிம் லீக்’ அமைப்பின் உறுப்பினர்கள் இந்தப் பயிற்சியை நடத்துகின்றனர். இதிலும் லஷ்கர் மூத்த உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்தத் தகவலை நேரடியாக அறிந்த வட்டாரங்களும், பாதுகாப்பு அமைப்புகளிடையே பரிமாறப்படும் உளவுத்துறை அறிக்கைகளும் உறுதிப்படுத்துகின்றன.
சார்னா தீவானது கராச்சி துறைமுகம், பாகிஸ்தான் கடற்படைத் தளங்கள் மற்றும் அரபிக் கடலில் உள்ள முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.
இது கடல்சார் நாசவேலைகள், கடல் வழியாக ஊடுருவல் அல்லது 2008 நவம்பர் 26-ல் மும்பையில் நடத்தப்பட்டது போன்ற தாக்குதல்களுக்கான பயிற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நீண்ட கடற்கரையைக் கொண்ட இந்தி யாவை குறிவைத்து இந்த முயற்சியில் தீவிரவாதிகள் இறங்கியுள்ளதால் இந்திய கடலோர பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.