புதுடெல்லி: நாட்டில் உள்ள முக்கிய கோயில்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் ஷபீர் அகமது லோன் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவால் மிகவும் தீவிரமாக தேடப்படும் தீவிரவாதிகளில் ஒருவர் லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் ஷபீர் அகமது லோன். இவர், தமிழ்நாட்டின் திருப்பூர், மேற்கு வங்கத்தின் மால்டா மற்றும் டெல்லியில் இருந்து இளைஞர்களைத் திரட்டியுள்ளார். சந்தேகத்தைத் தவிர்க்க, தென்னிந்தியாவில் வசிப்பவர்களை வட இந்தியாவில் தாக்குதல் நடத்தவும், வட இந்தியர்களை தெற்கில் பயன்படுத்தவும் அவர் திட்டமிட்டிருந்தார்.
அவர் நியமித்த நபர்கள் பல இடங்களை உளவு பார்த்துள்ளனர். நீண்ட கால இடைவெளியில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்துவதே இவர்களது திட்டமாக இருந்துள்ளது. இதேபோல், மேற்கு வங்கத்தில் சட்ட விரோதமாக வசிக்கும் வங்கதேசத்தினரைத் திரட்டி, குறிப்பாகக் கோயில்களை உளவு பார்க்க அவர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். டெல்லி சாந்தினி சவுக்கில் உள்ள கவுரி சங்கர் கோயில் மற்றும் கல்காஜி கோயில்களை உளவு பார்க்க லோன் உத்தரவிட்டது விசாரணையில் உறுதியானது.
நேபாளத்தில் இருந்து செயல்பட்டு வந்த லோன், தனது கூட்டாளிகளின் கைதால் அதிர்ச்சியடைந்து, நிலைமையைச் சீரமைக்க இந்தியாவுக்குள் நுழைய முயன்றுள்ளார். இதை கண்காணித்து வந்த டெல்லி போலீஸின் சிறப்புப் படையினர் காசிப்பூரில் வைத்து அவரை கைது செய்துள்ளனர். இதன் மூலம் மிகப்பெரிய அளவிலான தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.