புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என லாலுவின் மனைவி ராப்ரி கோரிக்கை வைத்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வே வேலை வழங்க நிலம் லஞ்சமாக பெறப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி, மகன் தேஜஸ்வி உள்ளிட்டோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றை சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே விசாரித்து வருகிறார். இந்நிலையில், முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி முன்பு ராப்ரி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘‘எங்களை தண்டிக்க வேண்டும் என முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட மனநிலையுடன் நீதிபதி கோக்னோ செயல்படுகிறார். நியாயமான விசாரணை நடைபெறாது என கருதுகிறேன். எனவே, வேறு நீதிபதிக்கு இந்த வழக்குகளை மாற்ற வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.