

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாதா வைஷ்ணவ தேவி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் எக்ஸலன்ஸ் என்ற பெயரில் மருத்துவக் கல்லூரி இந்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியை நடத்தி வருவது மாதா வைஷ்ணவ தேவி கோயில் வாரியம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தக் கல்வியாண்டில் இந்தக் கல்லூரியில் உள்ள 50 எம்பிபிஎஸ் இடங்களும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டன. இதில் 42 முஸ்லிம் மாணவர்களும், 8 இந்து மாணவர்களும் சேர்க்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இதை கண்டித்து விஎச்பி, பஜ்ரங் தள், பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கல்லூரியை நடத்துவது மாதா வைஷ்ணவ தேவி கோயில் வாரியம் என்பதால் கல்லூரியில் மருத்துவப் படிப்புகளுக்கு இந்து மத மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இந்த கோயில் வாரியம், இந்து மதத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கொடுக்கும் நிதியுதவியால் நடத்தப்படுகிறது. எனவே, இந்து மாணவ, மாணவிகள் நலனைப் பாதுகாத்து அவர்களுக்கு எம்பிபிஎஸ் இடங்களை வழங்க முன்வரவேண்டும் என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகிகள் கூறும்போது, ‘‘இந்த மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை என்பது மதிப்பெண் அடிப்படையில் மட்டும் தான். கல்லூரிக்கு சிறுபான்மை அந்தஸ்து இல்லாததால், மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டைப் பயன்படுத்த முடியவில்லை’’ என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறும்போது, “திறமை அடிப்படையில் மட்டும்தான் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடம் அளிக்கப்படுகிறது. திறமை, மதிப்பெண் அடிப்படையில் இடம் அளிக்க வேண்டாம் என்றால் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி நீதிமன்ற ஆணையை பெற்றுக்கொண்டு இங்கு வரலாம்’’ என்றார்.