புதுடெல்லி: இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாக லடாக் உள்ளது; சீனா எவ்வளவு மறுத்தாலும் இந்த உறுதிப்படுத்தப்பட்ட உண்மையை மாற்ற முடியாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
சீன நாட்டின் எல்லையில் லடாக் யூனியன் பிரதேசம் உள்ளது. இதனிடையே லடாக்கின் சில பகுதிகளை சீனா தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என்று கூறி வருகிறது. இதற்கிடையே, லடாக் யூனியன் பிரதேசத்தின் எல்லையில் உள்ள 28 பகுதிகளுக்கு இந்தியா பெயரைச் சூட்டியுள்ளது. எல்லையில் அமைந்துள்ள கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் என மொத்தம் 28 பகுதிகளுக்கு இந்தியா பெயர் வைத்துள்ளது.
இதில் கடந்த 2020-ம் ஆண்டு சீன படையுடன் இந்திய படையினர் மோதிய இடமும் அடங்கியுள்ளது. இந்நிலையில், லடாக் எல்லையில் 28 இடங்களுக்கு இந்தியா பெயர் வைத்ததற்கு சீனா நேற்று கண்டனம் தெரிவித்துள்ளது.
லடாக் யூனியன் பிரதேசத்தை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை என்றும், அப்பகுதிகளுக்கான இடங்களின் பெயர்களை முறைப்படுத்தி இந்தியா வெளியிட்ட நடவடிக்கையை சட்டவிரோதமானது மற்றும் செல்லுபடியாகாதது என்றும் சீனா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: லடாக் யூனியன் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாகும். சீனா எவ்வளவு மறுத்தாலும் உறுதி செய்யப்பட்ட இந்த உண்மையை யாராலும் மாற்ற முடியாது.
லடாக் யூனியன் பிரதேச நிர்வாகம் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, இந்திய நில அளவைத்துறையின் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் லடாக்கில் 28 இடங்களின் பெயர்களை கடந்த 2-ம் தேதி அறிவித்தோம். இந்த இடங்களை துல்லியமாக அடையாளம் காண்பதை எளிதாக்குவதும், அவை குறித்த பொது விழிப்புணர்வை மேம்படுத்துவதுவே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.