அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா
குவாஹாட்டி: மொத்தம் 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு ஏப்.9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. இங்கு தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளையில் கடந்த 2016-ல் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் முயன்று வருகிறது.
இந்நிலையில், அசாம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததில் கோடீஸ்வரர்கள் பலர் போட்டியிடுவது தெரிகிறது. அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பணக்கார வேட்பாளராக கருதப்பட்டாலும் அவரை விட பணக்காரர்கள் பலர் இத்தேர்தலில் போட்டியிடுகி்ன்றனர்.
அசாமில் கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் ராய் ரூ.261 கோடிக்கு மேற்பட்ட சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார். இதையடுத்து அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் பத்ருதீன் அஜ்மல் ரூ.226 கோடிக்கு மேற்பட்ட சொத்துகளுடன் 2-வது இடத்திலும் காங்கிரஸ் கட்சியின் ஜயந்தா காண்ட் ரூ.67 கோடி சொத்துகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இதைத் தொடர்ந்து போடோலாந்து மக்கள் முன்னணி வேட்பாளர் செவ்லி மொஹிலாரி (சுமார் ரூ.63 கோடி), திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ரோஜி அகமது (ரூ.54 கோடி), சுயேச்சை வேட்பாளர் நந்திகிரி புயான் (ரூ.47 கோடி) ஆகியோர் முறையே 4, 5 மற்றும் 6-வது இடத்தில் உள்ளனர். முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ரூ.35 கோடி சொத்துகளுடன் 7-வது இடத்தில் உள்ளார்.
இவரை தொடர்ந்து பாஜக வேட்பாளர்கள் அசோக் சிங்கால் (ரூ.34 கோடி), நபா குமார் தோலே (ரூ.33 கோடி), காங்கிரஸ் வேட்பாளர் அமினுல் ஹக் லஸ்கர் (ரூ.30 கோடி) ஆகியோர் முறையே 8, 9 மற்றும் 10-வது இடத்தில் உள்ளனர். இத்தேர்தலில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஜலுக்பரி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மாநில காங்கிரஸ் தலைவரும் மக்களவை எம்.பி.மான கவுரவ் கோகோய் போட்டியிடுகிறார். அசாமில் இவ்விரு தலைவர்கள் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ள இத்தொகுதி மிகுந்த கவனம் பெற்றுள்ளது.
கவுரவ் கோகோய், முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் மகன் ஆவார். இவர் கடந்த 2014-ல் அரசியலில் நுழைந்தது முதல் தொடர்ந்து 3 முறை மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். முதல்வர் ஹிமந்தா 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் அனுபவம் கொண்டவர். முன்னாள் காங்கிரஸ் தலைவரான இவர் கடந்த 2015-ல் பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் பல தேர்தல் பிரச்சாரங்களை இவர் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார்.