கோப்புப்படம்
புதுடெல்லி: காற்று மாசுப் பிரச்சினையிலிருந்து டெல்லி நகரை மீட்க பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கிரண் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கிரண் பேடி நேற்று கூறியதாவது: நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுப் பிரச்சினை அதிகமாக உள்ளது. காற்றின் தரக் குறியீடு மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. இந்த நிலை நீடித்தால் டெல்லியில் வாழும் மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.
டெல்லி நகர ஆட்சி, அதிகாரத்தை ரிமோட் கன்ட்ரோல் மூலம் யாராலும் கட்டப்படுத்த முடியாது. அதிகாரிகள் தெருவில் இறங்கி தூசு நிறைந்த பகுதியில் நிற்க வேண்டும், அதே காற்றை சுவாசிக்க வேண்டும், அவசரமாக செயல்பட வேண்டும்.
டெல்லியில் உள்ள அரசு அதிகாரிகள், தங்களது அலுவலகங்களை விட்டுவிட்டு வீதிக்கு வந்து நிலைமையை ஆராய்ந்தால்தான் உண்மை நிலை அவர்களுக்குத் தெரியவரும். சுத்தம் செய்யப்பட்ட அறைக்குள் அமர்ந்துகொண்டு நிர்வாகம் செய்ய முடியாது.
டெல்லியில் காற்று மாசுவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகத் தலையிட வேண்டும். காற்று மாசுபாடுகளைக் குறைப்பதற்கான முயற்சிகளில் நேரடியாக பிரதமர் மோடி வழிநடத்தவேண்டும்.
நான் புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக இருந்தபோது பிரதமருடன் பலமுறை பேசியுள்ளேன். பல்வேறு தேசிய சவால்கள் எழுந்தபோது அதை கையாள்வது எவ்வாறு என்பதை எனக்கு உணர்த்தி இருக்கிறீர்கள். காலக்கெடு மற்றும் இலக்குகளை அடைய அனைவரும் உங்களது தூண்டுதலால் உத்வேகம் பெற்றனர்.
எனவே, அலுவலக அறைகளில் உட்கார்ந்து கொண்டு ஒருவர் மீது ஒருவர் குறைகளைச் சொல்லாமல் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் தெருவில் இறங்கி நடக்க வேண்டும் (காரில் செல்லக்கூடாது). புகைமூட்டம் நிறைந்த தெருவுக்குள் நுழையும்போதுதான் காற்றின் தரக்குறியீடு அதிகாரிகளுக்குத் தெரியவரும். கள நிலைமை அதிகாரிகளுக்கு புரியும்.
தினமும் வெளியே வந்து ஒவ்வொரு முறையும் வீதியில் நடக்கவேண்டும். ஒவ்வொரு முறை நடக்கும்போது ஒவ்வொரு விதமான திட்டங்கள் வெளியே வரும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.