காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் எத்தனால் தயாரிப்பு என்ற பெயரில் ரூ.1,200 கோடி மதிப்பில் அரிசி ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
பெட்ரோலுடன் கலப்பதற்காக எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை அதிகரிக்கும் நோக்கில், மானியத் திட்டத்தின் கீழ் எத்தனால் ஆலைகளுக்கு அரிசி அனுப்பப்படுகிறது. மத்திய பிரதேசம் சிந்த்வாராவில் உள்ள ஓர் எத்தனால் ஆலைக்கு அனுப்பப்பட்ட அரிசி மூட்டைகள் அங்கு சென்றடையவில்லை என்று இந்திய உணவுக் கழகம் புகார் அளித்தது.
இந்நிலையில், மானிய விலையிலான அந்த அரிசி, தனியார் ஆலைகளுக்குத் திருப்பிவிடப்பட்டு கொள்முதல் மற்றும் அரவை முறை மூலம் மீண்டும் அரசு நிறுவனங்களுக்கே விற்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்துகிறது. இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: மத்தியப் பிரதேசம் தற்போது ஊழலின் மையமாக மாறியுள்ளது. பாஜகவும் அரசு இயந்திரமும் இணைந்து பொதுமக்களுக்கு சொந்தமான அரிசியை கொள்ளையடிக்கின்றன. எத்தனால் என்ற பெயரில் ரூ.1,200 கோடி அரிசி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இளம் பெண்களின் ஊட்டச்சத்துக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய அரிசி, ஊழலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
அரிசி ஆலை அதிபர்கள், எத்தனால் மாஃபியாக்கள் மற்றும் பாஜக அரசின் ஆதரவோடு 5 லட்சம் டன் அரிசி இந்த ஊழல் விளையாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இம்மாநிலத்தை ஊழலின் மாதிரியாக பாஜக மாற்றியுள்ளது, வழக்கம் போல் பிரதமர் மோடி அமைதியாக வேடிக்கை பார்க்கிறார். இவ்வாறு கார்கே கூறினார்.