இந்தியா

கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் ரியாக்‌ஷன்களும் - ஒரு விரைவுப் பார்வை

காங்.+ வசமான 4 மாநகராட்சிகள்; திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக+ வெற்றி!

வேட்டையன்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் கொச்சி, கொல்லம், திருச்சூர், கண்ணூர் ஆகிய 4 மாநகராட்சிகளை காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணியும், கோழிக்கோடு மாநகராட்சியை இடதுசாரி ஜனநாயக கூட்டணியும், திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் வென்றுள்ளன. இது, என்டிஏ கூட்டணிக்கு திருவனந்தபுரம் மாநகராட்சியில் கிடைத்துள்ள முதல் வெற்றியாகும்.

கேரள மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் 4 மாநகராட்சிகளில் வென்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு இது அமோக வெற்றி என அந்த கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் மொத்தம் 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த 9-ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம் பகுதிகளிலும், 11-ம் தேதி அன்று திருச்சூர், மலப்புரம், வயநாடு, பாலக்காடு, கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 73.69 சதவீத வாக்குகள் இதில் பதிவானது.

இந்த தேர்தல் முடிவுகள் எல்டிஎஃப் கூட்டணியின் இழப்பு, காங்கிரஸ் கூட்டணியின் ஆதாயமாக அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் தேர்தல் பரப்புரையில் என்டிஏ கூட்டணி அளித்த வாக்குறுதிகள் காரணமாக கேரள தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை அந்த கூட்டணி வென்றுள்ளது. நிச்சயம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என அந்தக் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றிக்கு பிறகு தெரிவித்தனர். திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் 50 இடங்களில் என்டிஏ கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

நகராட்சிகளை பொறுத்தவரையில் யுடிஎஃப் 54, எல்டிஎஃப் 28, என்டிஏ 2 இடங்களிலும் வென்றுள்ளன. கிராம பஞ்சாயத்துகளில் யுடிஎஃப் 504, எல்டிஎஃப் 341 மற்றும் என்டிஏ 26 இடங்களில் வென்றுள்ளன. மாவட்ட பஞ்சாயத்துகளில் யுடிஎஃப் மற்றும் எல்டிஎஃப் தலா 7 இடங்களில் வென்றுள்ளன. வட்ட அளவில் யுடிஎஃப் 79, எல்டிஎஃப் 63 இடங்களில் வென்றுள்ளன.

சசி தரூர்: “கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் என்னவொரு அற்புதமான முடிவுகள் நிறைந்த நாள். மக்கள் ஆணை தெளிவாக உள்ளது, மேலும் மாநிலத்தின் ஜனநாயக உணர்வு பிரகாசமாகத் தெரிகிறது.

பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் உண்மையிலேயே ஈர்க்கக்கூடிய வெற்றியைப் பெற்ற யுடிஎஃப்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இது ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக ஒரு சக்திவாய்ந்த சமிக்சையாகும். கடின உழைப்பு மற்றும் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை ஆகியவை அனைத்தும் 2020-ஐ விட மிகச் சிறந்த ஒரு முடிவை அடைய உதவியுள்ளன.

திருவனந்தபுரத்தில் பாஜக-வின் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திறனையும் நான் பாராட்ட விரும்புகிறேன். மாநகராட்சியில் அவர்கள் பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிக்கு எனது பணிவான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தலைநகரின் அரசியல் களத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கும் ஒரு வலுவான செயல்திறனாகும்.

45 ஆண்டுகால இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தவறான ஆட்சிக்கு ஒரு மாற்றத்திற்காக நான் பிரச்சாரம் செய்தேன். ஆனால் இறுதியில், ஆட்சியமைப்பில் மாற்றத்தை விரும்பிய மற்றொரு கட்சிக்கு வாக்காளர்கள் வெகுமதி அளித்துள்ளனர்.

அதுதான் ஜனநாயகத்தின் அழகு. ஒட்டுமொத்தமாக யுடிஎஃப்-ஆக இருந்தாலும் சரி அல்லது எனது தொகுதியில் பாஜக-வாக இருந்தாலும் சரி, மக்களின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும்.

கேரளாவின் மேம்பாட்டிற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம், மக்களின் தேவைகளுக்காக வாதிடுவோம் மற்றும் நல்லாட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்துவோம். முன்னேறிச் செல்வோம்” என்றார்.

ராகுல் காந்தி: ‘‘உள்ளாட்சித் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி மீது நம்பிக்கை வைத்த கேரள மக்களுக்கு ஒரு சல்யூட். இது ஒரு தீர்க்கமான மற்றும் உற்சாகம் அளிக்கும் மக்கள் ஆணை.

ஐக்கிய ஜனநாயக முன்னணி மீதான நம்பிக்கை அதிகரித்து வருவதற்கான தெளிவான அறிகுறியாக இந்த முடிவுகள் உள்ளன. மேலும், வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நமது மாபெரும் வெ்றறிக்கு இது வழிவகுக்கும். மக்களின் பிரச்சினைகளை கேட்கும், பதில் அளிக்கும், வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பான ஆட்சியை கேரளா விரும்புகிறது என்பதே இந்த தேர்தலின் செய்தி.

கேரளாவின் சாமானிய மக்களுடன் நிற்பது, அவர்களின் அன்றாட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, வெளிப்படையான மற்றும் மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை உறுதி செய்வது என்பதில் எங்கள் கவனம் அசைக்க முடியாததாக இருக்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளுக்கும் வாழ்த்துகள். இந்த வெற்றியை சாத்தியமாக்க அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்’’ என்றார் ராகுல் காந்தி.

பிரதமர் நரேந்திர மோடி: “கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மற்றும் என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றி. கேரள மக்கள் யுடிஎஃப் மற்றும் எல்டிஎஃப் மீது சலிப்படைந்துவிட்டனர். நல்லாட்சியை வழங்கி, அனைவருக்கும் வாய்ப்புகளுடன் ஒரு வளர்ந்த கேரளத்தை உருவாக்கக்கூடிய ஒரே தேர்வாக என்டிஏ-வை மக்கள் பார்க்கிறார்கள்.

திருவனந்தபுரத்துக்கு நன்றி. திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக-என்டிஏ பெற்ற இந்த வெற்றி, கேரள அரசியலில் ஒரு திருப்புமுனையாகும். மாநிலத்தின் வளர்ச்சிக்கான இலக்குகளை எங்கள் கட்சியால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். எங்கள் கட்சி இந்த துடிப்பான நகரத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் பாடுபடும்.

மக்களிடையே பணியாற்றிய, கடினமாக உழைத்த அனைத்து பாஜக தொண்டர்களுக்கும் எனது நன்றி. இதுவே திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஓர் அற்புதமான முடிவை உறுதி செய்துள்ளது.

இன்று, கேரளாவில் அடிமட்ட அளவில் தலைமுறை தலைமுறையாக பணியாற்றிய தொண்டர்களின் உழைப்பையும் தியாகங்களையும் நினைவுகூர வேண்டிய நாள். அவர்களின் உழைப்பே இன்றைய இந்த முடிவு நிஜமாகியதை உறுதி செய்தது. எங்கள் தொண்டர்களே எங்கள் பலம், அவர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT