புதுடெல்லி: டெல்லி கார் குண்டு தாக்குதல் வழக்கில் பலர் கைதாகி உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். இதனால் வட மாநிலங்களில் தங்களை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதாக ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் வருந்துகின்றனர்.
மாநில மற்றும் மத்தியப் பாதுகாப்பு படைகளின் சோதனைகளால் தங்கள் மீது வெளிப்படையான அவநம்பிக்கையும் அறிவிக்கப்படாத சமூக புறக்கணிப்பு மற்றும் மிரட்டல்களும் இருப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சில இடங்களில் உள்ளூர் கடைகள் தங்களுக்கு மளிகைப் பொருட்களை வழங்க மறுப்பதாக இவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் டெல்லியில் பயிலும் காஷ்மீர் மாணவர்கள் கூறுகையில், ‘‘இதுவரை எங்களுடன் நட்புடன் பழகிவந்த சக மாணவர்கள் இப்போது எங்களை சந்தேகத்துடன் பார்க்கின்றனர். எங்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என அவர்கள் மறைமுகமாகப் பேசுவது எங்கள் காதுக்கு வருகிறது. நாங்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் அண்டை வீட்டாரின் நடத்தையிலும் எங்களால் மாற்றத்தை உணர முடிகிறது. இதனால் நாங்களும் மற்றவர்களைப் போல் இந்தியர்களாக இருந்தும் ஒருவகையில் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறோம்” என்று தெரிவித்தனர்.
ஹரியானாவின் பரிதாபாத்தில் அல் பலா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் பயிலும் காஷ்மீர் மாணவர்கள் சுமார் 2,000 பேர் போலீஸாரால் விசாரிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு வெளியே செயல்படும் காஷ்மீர் மாணவர் அமைப்புகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளன.
அதில், ‘‘வட மாநிலங்களில் உள்ள காஷ்மீர் மாணவர்கள் ஆங்காங்கே திடீர் என வெளியேற்றப்படுகின்றனர். விசாரணைகளால் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். இந்த கவலைக்குரிய, ஆபத்தான போக்கை அகற்றி, காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதி செய்ய வேண்டும்’’ என்று அவர்கள் கோரியுள்ளனர்.