இந்தியா

ஆணவ கொலைக்கு எதிராக கர்நாடகாவில் விரைவில் தனிச் சட்டம்: 10 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம்

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடகாவில் சாதி, மத‌, ஆணவ கொலைகளை தடுக்கும் நோக்கில் தனிச்சட்டம் கொண்டுவர மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் அண்மைக்காலமாக சாதி, மதம் கடந்து காதல் திருமணம் செய்யும் தம்பதிகள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா, சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி.மஹாதேவப்பா உள்ளிட்டோரும் முதல்வர் சித்தராமையாவிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வருவதற்கான மசோதாவை தயாரிக்கும் படி சித்தராமையா சட்ட அமைச்சகத்துக்கு உத்தரவிட்டார். இதற்கான சட்ட மசோதா கடந்த மாதம் தயாரான நிலையில், அதுகுறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து, ஒப்புதல் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகள் வரை தண்டனை இந்த சட்ட மசோதாவில், ‘‘18 வயதான பெண்ணும், 21 வயதான ஆணும் தங்களின் விருப்பத்தின்பேரில் திருமணம் செய்துகொள்ள முழு உரிமை இருக்கிறது.

அவர்களை சாதி, மதம், மொழி, வர்க்கம், இனம், ஊர் ஆகியவற்றின் பெயரில் பாகுபாடு காட்டி, கவுரவத்தின் பெயரில் திருமணம் செய்வதை தடுக்கவோ, தாக்கினாலோ, கொலை செய்தாலோ குற்றமாகும். உயிருடன் மகளுக்கோ, மகனுக்கோ இறுதி சடங்கு, திதி போன்ற சடங்குகள் செய்வது, மன‌ரீதியாக தொல்லை கொடுப்பது, மிரட்டல் விடுப்பது, குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைப்பது போன்றவையும் இந்த சட்டத்தின்படி குற்றமாகும்.

ஆணவக் கொலையில் ஈடுபடும் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

அபராதமாக ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை விதிக்கப்படும். காதலர்கள் தங்களுக்கு பாதுகாப்புக் கோரி, காவல் நிலையத்தில் புகார் அளித்த 6 மணி நேரத்துக்குள் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்''என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT