இந்தியா

இ20 பெட்ரோலில் 31% வரை எத்தனால்: ஆய்வில் கண்டறிந்ததாக கர்நாடக அரசு தகவல்

வேட்டையன்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இ20 பெட்ரோலில் சுமார் 31.2 சதவீதம் வரை எத்தனால் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி தகவலை அம்மாநில அரசு பகிர்ந்துள்ளது.

ஆய்வின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை அம்மாநில உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை முன்வைத்துள்ளது. இதற்காக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இயங்கும் எரிபொருள் நிலையத்தில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் வெவ்வேறு எண்ணெய் நிறுவனங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 63 மாதிரிகளை சேகரித்த அளவியல் பிரிவு அதிகாரிகள் அதனை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர். அதில் தான் பெட்ரோலில் எத்தனால் கலப்பின சதவீதம் 31.2% வரை இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. முதலில் இது குறித்து பெட்ரோல் விற்பனை செய்த எண்ணெய் நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அரசு தரப்புக்கு தெளிவான பதில் கிடைக்காத நிலையில் தனியார் ஆய்வகங்களுக்கு இந்த மாதிரியை அனுப்பியதில் இந்த விவகாரம் தெரியவந்துள்ளது.

சேகரிக்கப்பட்ட பெட்ரோல் மாதிரிகளில் எத்தனால் கலப்பின் விகிதம் 20 சதவீதத்துக்கு மேல் இருந்தது தெரியவந்துள்ளது. பெங்களூரு, கோலார், சிக்கபல்லபுரா, துமகுரு, உத்தர கன்னடா ஆகிய பகுதிகளில் இருந்து இந்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“சேகரிக்கப்பட்ட மாதிரிகள் முதலில் ஐ.ஓ.சி.எல், பி.பி.சி.எல் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டது. அதன் ஆய்வு முடிவில் எத்தனால் கலப்பு விகிதம் குறித்த விவரம் தெளிவாக இல்லை. அதனால் அதன் வெளிப்படைத்தன்மை மீது சந்தேகம் எழுந்தது. நுகர்வோரிடம் இருந்து எதை மறைக்க பார்க்கிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.

இதன் பின்னர் ஐஎஸ்ஓ மற்றும் என்.ஏ.பி.எல் அங்கீகாரம் பெற்ற தனியார் ஆய்வகங்களுக்கு அதே மாதிரியை அனுப்பி வைத்தோம். அதில் ஒரு ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆறு முடிவுகளில் பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் 20 சதவீதத்துக்கும் கூடுதலாக இருந்தது கண்டறியப்பட்டது. இது நுகர்வோரை பாதிக்க செய்கிறது. வாகனத்தின் மைலேஜ் மற்றும் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நுகர்வோருக்கும் மத்திய அரசு இ20 இழப்பீடு நிதி வழங்க வேண்டும். இது குறித்த மத்திய அரசு முறையான விளக்கம் தர வேண்டும்.

மேலும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எத்தனால் கலப்பு விகிதம் குறித்து நுகர்வோருக்கு தெரிவிக்கும் வகையில் டிஜிட்டல் அறிவிப்பு இடம்பெறுவது உறுதி செய்ய வேண்டும்” என்று கர்நாடக உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் தெரிவித்துள்ளார்.

இ20 பெட்ரோல்

பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலந்து, வாகன எரிபொருளாக அதைப் பயன்படுத்துவதே இ20 பெட்ரோல் என்று அழைக்கப்படுகிறது.

மாசு குறைவு, எண்ணெய் இறக்குமதி செலவுகளைக் கட்டுப்படுத்தவும் இது உதவும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அந்நியச் செலாவணி மிச்சமாகும், அதோடு நாட்டின் எரிசக்தி பாதுகாப்பும் வலுவடையும் என தகவல்.

பெட்ரோலில் 1.4 சதவீத எத்தனால் கலக்கப்பட்டு அதன் விற்பனை கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது. அதன்பிறகு, 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை கடந்த 2022 நவம்பரில் அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகம் செய்யப்பட்டது. 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை வரும் 2030-ல் அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இ20 பெட்ரோல் விற்பனை இந்தியாவில் தொடங்கியது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT