பெங்களூரு: பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கர்நாடகாவில் ‘பனீர்’ என்ற பெயரில் விற்கப்படும் ‘அனலாக் பனீர்’ உற்பத்தி, இருப்பு வைத்தல், விநியோகம் மற்றும் விற்பனைக்கு அம்மாநில அரசு ஓராண்டு காலத்துக்குத் தடை விதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ‘அனலாக் பனீர்' உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தற்போது கர்நாடகாவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக உணவுப் பாதுகாப்புத் துறையின் ஆணையர் ஸ்ரீனிவாஸ் கடந்த 17ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “கர்நாடகாவில் ‘பனீர்’ என்ற பெயரில் விற்கப்படும் அனலாக் அல்லது பால் அல்லாத பனீர் (Non-Dairy Paneer) வகைகளின் உற்பத்தி, பதப்படுத்துதல், பேக்கேஜிங், இருப்பு வைத்தல், விநியோகம், போக்குவரத்து, மொத்த மற்றும் சில்லறை விற்பனை, விற்பனைக்காக காட்சிப்படுத்துதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கு ஓராண்டு காலத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, “பால் கொழுப்பு அல்லது பால் திடப்பொருட்களுக்குப் பதிலாக தாவர எண்ணெய், தாவரக் கொழுப்பு அல்லது பால் அல்லாத பிற பொருட்களைப் பயன்படுத்தி பனீர் வடிவில் தயாரிக்கப்படும் ஒரு தயாரிப்பு 'அனலாக்' அல்லது 'பால் அல்லாத பனீர்' எனக் கருதப்படுகிறது.
இத்தகைய தயாரிப்புகளை நுகர்வோரிடம் 'பனீர்' என்று குறிப்பிடவோ, சந்தைப்படுத்தவோ, விற்கவோ அல்லது அடையாளப்படுத்தவோ கூடாது. 'உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் விதிமுறைகளின்படி, பனீர் என்பது பாலிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு தரப்படுத்தப்பட்ட உணவுப் பொருளாகும்.
பால் கொழுப்பு என்பது பனீரின் முக்கிய அங்கமாகும். பால் கொழுப்புக்கு மாற்றாகவோ அல்லது பால் கூறுகளுக்குப் பதிலாகவோ தாவர எண்ணெய், தாவரக் கொழுப்பு அல்லது பால் அல்லாத பிற பொருட்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படாது.
கர்நாடகாவில் பல பனீர் மாதிரிகளைப் பரிசோதித்ததில், அவற்றில் கலப்படம் எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. தாவர எண்ணெய், தாவரக் கொழுப்பு அல்லது பால் அல்லாத பிற பொருட்களைக் கொண்டு பனீரில் கலப்படம் எதுவும் செய்யப்படவில்லை என்றாலும், பொது நலன் மற்றும் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் (FSSAI) தரம் நிர்ணயிக்கப்படாத 'பால் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்களுக்கு' மட்டுமே இந்தத் தடை பொருந்தும்.
மேலும், எந்தவொரு உணவுப் பொருளையும் தயாரிப்பதில் 'அனலாக்' அல்லது பால் அல்லாத பனீர்-ஐ பயன்படுத்துவதோ, சேமித்து வைப்பதோ, விநியோகிப்பதோ அல்லது விற்பனை செய்வதோ கூடாது.
இந்த உத்தரவைச் சிறப்பாகச் செயல்படுத்தவும் அமல்படுத்தவும் உணவுப் பாதுகாப்புத் துறை மாநிலம் முழுவதும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். உணவு வணிக நிறுவனங்கள் இந்த உத்தரவின் விதிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது” என தெரிவித்துள்ளனர்.