கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே
பெங்களூரு: “இந்தியாவின் முதல் அரசு சார்ந்த ஏஐ பல்கலைக்கழகம் பெங்களூருவில் அமைக்கப்படும்” என்று கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
இதுகுறித்து கர்நாடக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகராக பெங்களூரு விளங்குகிறது. இந்தியாவின் மென்பொருள் துறை வருமானத்தில் 40 சதவீத பங்களிப்பைக் கர்நாடக மாநிலம் மட்டுமே வழங்குகிறது.
பெங்களூருவில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான புதுமையான தொழில் நிறுவனங்களும் உலகளாவிய திறன் மையங்களும் உள்ளன. கர்நாடக மாநிலம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த அறிவை இளைஞர்களிடையே வளர்க்க திட்டமிட்டுள்ளோம்.
இந்தியாவின் முதல் அரசு சார்ந்த செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகத்தை பெங்களூருவில் அமைக்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக முதல்வர் டி.கே.சிவகுமார் கூகுள் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த பல்கலைக்கழகத்திற்காகப் பெங்களூருவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் 5,800 ஏக்கர் பரப்பளவு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதே போல பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் 9,600 ஏக்கர் பரப்பளவில் செயற்கை நுண்ணறிவு நகரம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.