

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செல்ஃபி வீடியோ 30 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து உள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதுதொடர்பாக கடந்த 23-ம் தேதி நள்ளிரவில் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் ஒரு செல்ஃபி வீடியோவை வெளியிட்டார்.
அதில், வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நாடாளுமன்றத்தில் புதிய மசோதா விரைவில் நிறைவேற்றப்படும்” என்று உறுதி அளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோவை தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தை முன்னின்று நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, ஜிதேந்திர சிங்கை சந்தித்துப் பேசினர்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் இன்ஸ்டாகிராம் செல்ஃபி வீடியோவுக்கு பதில் அளிக்கும் வகையில் ஏராளமானோர் தங்கள் கருத்துகளை பதிவிட்டனர். இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இன்ஸ்டாகிராமில் மற்றொரு செல்ஃபி வீடியோவை வெளியிட்டார்.
அதில்,“நண்பர்களுக்கு நன்றி. கடந்த 23-ம் தேதி இரவு உங்களோடு பேசினேன். எனது வீடியோவுக்குப் பதில் அளித்து நீங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பதிவிட்டு உள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் பிணைப்பும் மேலும் வலுவடையும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புதிய செல்ஃபி வீடியோ 24 மணி நேரத்தில் 30.3 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து உள்ளது. இந்த வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.