பெங்களூரு: கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுராவை சேர்ந்தவர் ஆல்வின் பிரகாஷ் (52). இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா விமான நிலையத்தில் கடந்த 14 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி டினா பிரகாஷ் அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்களின் மகன் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 20ம் தேதி ஆல்வின் பிரகாஷின் சகோதரர் அனில் பிரஷாந்த் அவரை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் அழைப்பை ஏற்காமல், தான் நலமாக இருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பினார். மீண்டும் அனில் பிரஷாந்த் தனது சகோதரரையும், அவரது மனைவியையும் தொலைபேசியில் அழைத்த போது இருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அனில் பிரஷாந்த் ஷார்ஜாவில் உள்ள ஆல்வின் பிரகாஷின் நண்பர் மனோகரிடம் வீட்டுக்கு நேரில் சென்று விசாரிக்குமாறு கூறியுள்ளார். அவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, ஆல்வின் பிரகாஷ் குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு சென்றுவிட்டதாக காவலாளி கூறியுள்ளார்.
இதையடுத்து அவர் பணியாற்றிய நிறுவனத்தில் விசாரித்த போது, அவர்களும் ஆல்வின் பிரகாஷ் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டதாகக் கூறினர். இதனால் சந்தேகமடைந்த அனில் பிரஷாந்த் இணையதளம் வாயிலாக ஐக்கிய அரபு அமீரக போலீஸில் புகார் அளித்தார். மேலும் அங்குள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, ஆல்வின் பிரகாஷ் குடும்பத்தினரை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து போலீஸார், ஆல்வின் பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தின் பாஸ்போர்ட் பதிவுகளைச் சோதித்தனர். அதில் அவர்கள் 3 பேரும் இந்தியாவுக்கு வரவில்லை என்பதும், ஷார்ஜாவிலே தங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீஸார் ஆல்வின் பிரகாஷின் செல்போன் நடவடிக்கையை ஆராய்ந்ததில் அவர் கடைசியாக ஓமன் செல்லும் சாலைக்கு சென்றது தெரியவந்தது. அங்கு சென்று தீவிரமாக தேடிய போது, அங்குள்ள சாலையில் நின்றிருந்த காரில் 2 பைகளில் 9 துண்டுகளாக வெட்டிக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் ஆல்வின் பிரகாஷின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
மனைவி மகன் மாயம்
அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமராவில், 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் காரில் இருந்து அவசரமாக வெளியேறும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனை அடிப்படையாக வைத்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். காணாமல் போன ஆல்வின் பிரகாஷின் மனைவி மற்றும் மகனையும் போலீஸார் தேடி வருகின்றனர்.