

படம்: எல்.சீனிவாசன்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், போட்டித் தேர்வு எழுதுவோர் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் கல்வித்துறை முறைகேடுகள் குறித்து நேரடியாக உரையாட ‘மாணவர் குரல்' என்றநிகழ்வை ராகுல் காந்தி நடத்தி வருகிறார்.
ஏற்கெனவே கோட்டா, டேராடூன், பிரயாக்ராஜ், புனே, இந்தூர் ஆகிய 5 நகரங்களில் இந்தச் சந்திப்புகள் நடந்து முடிந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, 6-வது நிகழ்வு சென்னையில் நடைபெறுகிறது.
அக்.10-ம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை தீவுத்திடலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், ராகுல் காந்தி பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். இது சாதாரண அரசியல் பொதுக்கூட்டம் அல்ல.
இதில் பங்கேற்க விரும்புவோர் க்யூஆர் கோடு மூலம் முன்பதிவு செய்வது கட்டாயமாகும். முந்தைய 5 நகர கூட்டங்களில் ராகுல் காந்தி முன்வைத்த முக்கியத்தரவுகள் நாட்டையே அதிர வைத்துள்ளன.
மத்திய அரசு கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை 4.6 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாகக் குறைத்துவிட்டது. எனவே நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் தற்கொலைகள் குறித்துப் பேசிய அவர், ‘கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், மாநிலங்களின் விருப்பத்துக்கு ஏற்ப நீட் தேர்வை அமல்படுத்தும் உரிமையை வழங்க வேண்டும்.
தமிழகத்துக்கு நீட் வேண்டாம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு அதை மதிக்கவில்லை’ என்று தெரிவித்திருந்தார். நாளிதழில் வெளியான புலனாய்வுச் செய்தியின் மூலம், தேர்தல் ஆணையத்தில் வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தன் சுதந்திரத்தை இழந்துவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.