பெங்களூரு: கேரள பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாயமாக மலையாளம் கற்க வகை செய்யும் சட்ட மசோதா கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை விரைவில் சட்டமாக்க மாநில அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு கர்நாடக அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடக எல்லையோர மக்கள் வளர்ச்சி வாரியத்தின் சார்பில் அதன் செயலாளர் பிரகாஷ் மத்திஹள்ளி உள்ளிட்ட நிர்வாகிகள் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: கேரளாவின் வயநாடு, காசர்கோடு ஆகிய எல்லையோர மாவட்டங்களில் கன்னடர்கள் பரவலாக வாழ்கின்றனர். குறிப்பாக காசர்கோடு மாவட்டத்தில் 70 சதவீதத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் கன்னடர்கள் இருக்கின்றனர். இவர்கள் தங்களின் தாய்மொழியான கன்னடத்தை கற்று வருகின்றனர்.
கேரள அரசின் மலையாள கட்டாய மசோதா அமல்படுத்தப்பட்டால், கன்னடர்கள் கன்னடம் கற்க முடியாத நிலை ஏற்படும். அரசியலமைப்பின் 350-வது பிரிவு மொழி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பது மாநிலத்தின் கடமை என்று குறிப்பிடுகிறது.
கேரள அரசு மலையாளத்தை கட்டாயமாக்குவது மொழி சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எதிரானது. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான அந்த மசோதாவை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு கேரள அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.