இந்தியா

சட்டமேலவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை: கர்நாடக பாஜக தலைவர்

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடக சட்டமேலவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களித்த‌ பாஜக, மஜத எம்எல்ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.

கர்நாடக சட்டமேலவையில் காலியாக இருந்த 7 இடங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஒரு வேட்பாளர் வெற்றிப் பெறுவதற்கு 28 எம்எல்ஏக்களின் வாக்குகள் தேவைப்பட்டன. சட்ட‌ப்பேரவையில் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காங்கிரஸ் 4 இடங்களிலும், பாஜக 2 இடங்களில் எளிதாக‌ வெற்றி பெறும்.

மஜதவுக்கு 19 எம்எல்ஏக்களின் வாக்குகள் இருப்பதால் பாஜகவின் ஆதரவுடன் ஓரிடத்தில் வெற்றி பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கடைசி நேரத்தில் கூடுதலாக வேட்பாளரை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கட்சி மாறி வாக்களிப்பதை தடுப்பதற்காக காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளின் மேலிடம் தங்களது எம்எல்ஏக்களை சொகுசு விடுதிகளில் பாதுகாப்பாக தங்க வைத்தது.

இந்த தேர்தலில் காங்கிரஸை சேர்ந்த பி.கே.ஹரி பிரசாத், பி.வி.மோகன், திப்பன்னப்பா கம்கூர், சிவண்ணா, வினய் கார்த்திக் ஆகிய 5 பேர் வெற்றி பெற்றனர். பாஜக சார்பில் போட்டியிட்ட லிங்கராஜு பாட்டீல், ரகு ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். மஜத சார்பில் போட்டியிட்ட கோவிந்தராஜூ 14 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

பாஜக, மஜதவை சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் கட்சி மாறி, காங்கிரஸூக்கு வாக்களித்ததால் 5வது வேட்பாளரும் வெற்றி பெற்றார். இதனால் அக்கட்சி மேலிடத் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா கூறுகையில், '“எங்களது கட்சியை சேர்ந்த 6 முதல் 8 எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்துள்ளனர். அதனைப் பற்றிய விவரங்கள் எனக்கு கிடைத்துள்ளன. அதேபோல மஜதவைச் சேர்ந்த 4 முதல் 6 எம்எல்ஏக்கள் காங்கிரஸூக்கு வாக்களித்துள்ளனர்.

கட்சி மாறி வாக்களித்தவர்களை மன்னிக்கும் பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் ஓரிரு தினங்களில் பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறேன். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும். கட்சி மாறி வாக்களித்த மஜத எம்எல்ஏக்கள் மீது அக்கட்சியின் தலைமை நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT