புதுடெல்லி: தாதாசாகேப் பால்கே விருதுக்கு பழம்பெரும் கன்னட நடிகர் அனந்த் நாக் (78) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பிஐபி வெளியிட்டுள்ள செய்தியில், “தேர்வுக் குழு பரிந்துரையின் அடிப்படையில், இந்திய திரைப்படத் துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காகவும், பல தலைமுறைகளைக் கடந்து பலருக்கும் உத்வேகம் அளித்த திரைப் பயணத்துக்காகவும் 2024-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதுக்கு கன்னட நடிகர் அனந்த் நாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் செப். 22-ல் நடைபெறவுள்ள 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இவ்விருது வழங்கப்படவுள்ளது. பிரதமர் மோடி வாழ்த்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தாதாசாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அனந்த் நாக் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
பல தசாப்தங்களாக அவரது இயல்பான நடிப்பு, குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மை ஆகியவை இந்திய சினிமாவில், குறிப்பாக கன்னட சினிமாவில் ஆழமான முத்திரையைப் பதித்துள்ளன. ஒரு சிறந்த கலைஞருக்குக் கிடைத்துள்ள தகுதியான கவுரவம் இது” என்று கூறியுள்ளார்.