சென்னை: பாஜகவைச் சேர்ந்தவர்கள் திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்றிவிட முயற்சி செய்து கொண்டிருப்பதாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில், நேற்று இது குறித்து அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றத்தில் பல நூற்றாண்டுகளாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மக்கள் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் சிக்கந்தர் தர்காவுக்கும் சென்று வழிபடுகின்றனர். இந்த மதநல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் விதமாக மக்களிடையே மத குரோதத்தை உருவாக்கக்கூடிய விதமாக தேவையில்லாமல் சிலர் பிரச்னைகளை உருவாக்குகின்றனர்.
ஏற்கெனவே இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு வழங்கிவிட்டது. இப்போது நீதிபதி சுவாமிநாதன் தேவையில்லாமல் தலையிட்டு அரசை மீறி ஒரு தீர்ப்பை வழங்கிஇருக்கிறார். தமிழக காவல் துறையைத் தாண்டி, மத்திய காவல்படையை தீபம் ஏற்றுவோருக்குத் துணையாக அனுப்பிவைக்கிறார்.
இதை பயன்படுத்திக்கொண்டு பாஜக மத கலவரத்தை உருவாக்க நினைத்தது. பாஜகவைச் சேர்ந்தவர்கள் இதை இன்னொரு அயோத்தியாக மாற்றிவிடவேண்டும் என்று முயற்சி செய்கின்றனர். நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ மற்றும் எல்.முருகன் ஆகியோர் பேசியது கண்டிக்கத்தக்கது.
மனிதர்கள் மனிதர்களாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை குலைக்கத்தான் பாஜக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.