கொச்சி: வரும் தேர்தலில் மார்க்சிஸ்ட் மற்றும் பாஜக இடையிலான ரகசியக் கூட்டணி வெற்றி பெறாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று முடிகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களின் உணர்வுகள் தங்களுக்கு எதிராக இருப்பதை ஆளும் மார்க்சிஸ்ட் (சிபிஐ-எம்) தலைமையிலான இடது சாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) நன்கு அறிந்துள்ளது, அதனால்தான் அவர்கள் தங்களது கடைசி தந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள். கேரளாவில் சிபிஐ(எம்)- பாஜக இடையே ரகசிய நட்பு உள்ளது. இது ஒன்றும் புதிதல்ல.
மத்திய அரசின் 'பிஎம்-ஸ்ரீ' போன்ற திட்டங்கள் மற்றும் மத்திய அரசு மீதான இடது சாரிக் கட்சிகளின் மென்மையான அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் இந்த ரகசிய உறவை அறிய முடிகிறது.
முதலமைச்சருக்கு எதிரான லாவ்லின் வழக்கு தொடர்ந்து தள்ளிப்போடப்படுவதை நாம் பார்க்கிறோம். அதேபோல், கேரளாவில் மத்திய முகமைகளின் விசாரணை வேகத்தையும் நாம் கவனித்து வருகிறோம்.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள சிபிஐ(எம்) மற்றும் பாஜக வேட்பாளர் பட்டியலிலேயே ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர். அவர்களது சொந்தக் கட்சித் தொண்டர்களே இந்த ஒப்பந்தத்தை நிராகரிப்பார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
ஏற்கெனவே இப்படி முயன்று அவர்கள் அம்பலப்பட்டார்கள். இப்போதும் அதேநிலைதான் ஏற்படும். இந்த ரகசிய கூட்டணி வெற்றி பெறாது. தற்போதைய அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதோடு, யுடிஎஃப் ஆட்சியின் திட்டங்களையும் முன்வைத்து வருகிறோம்.
கேரளாவுக்கான குறிப்பிட்ட திட்டங்கள் அடங்கிய விரிவான தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) ஆட்சிக்கு வந்தால், பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.