சிலிகுரி: மேற்குவங்கம் மால்டாவில் நீதிபதிகள் சிறைவைப்பு சம்பவத்துக்கு காரணமான வழக்கறிஞர் சிலிகுரி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியின் போது (எஸ்ஐஆர்), வாக்காளர்களின் பெயர்கள் அதிகளவில் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேற்குவங்கத்தில் நடைபெறும் எஸ்ஐஆர் பணிகளை அங்குள்ள மாவட்ட நீதிபதிகள் கண்காணிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி வாக்காளர்களின் புகார்கள் குறித்து ஆய்வு செய்ய 3 பெண் நீதிபதிகள் உட்பட மாவட்ட நீதிபதிகள் 7 பேர் கலியாசக் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சென்றனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் அங்கு ஒரு கும்பல் கூடியது. அவர்கள் நீதிபதிகளிடம் பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அந்த கும்பல் நீதிபதிகள் 7 பேரையும் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்குள் சிறை வைத்தது. இது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் போலீஸார் தடியடி நடத்தி நள்ளிரவு 1 மணியளவில் நீதிபதிகளை மீட்டனர். சுமார் 9 மணி நேரம் போராட்டக்காரர்களின் பிடியில் நீதிபதிகள் இருந்தனர். ஆனால், தனக்கு எதுவும் தெரியாது என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
இச்சம்பவத்தை தானாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில் இச்சம்பவத்தின் பின்னணியில் வழக்கறிஞர் மொஃபாக்கருள் இஸ்லாம் என்பவர் செயல்பட்டது தெரிய வந்தது. அவர் தப்பிச் செல்வதற்காக சிலிகுரி பக்டோக்ரா விமான நிலையத்தில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் வழக்கறிஞர் மொஃபாக்கருள் இஸ்லாமை கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் இது வரை 33 பேரை கைது செய்துள்ளனர்.