புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிக்காக (எஸ்ஐஆர்) உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பிற மாநிலங்களில் இருந்து நீதித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி, மால்டா மாவட்டத்தின் காலியாசக் மற்றும் மோதாபரி பகுதிகளில் பணிகளில் ஈடுபட்டிருந்த 7 நீதித்துறை அதிகாரிகளை சமூக விரோத கும்பல் ஒன்று சுற்றி வளைத்து சிறைபிடித்தது. இதில் மூன்று பெண் அதிகாரிகள் மற்றும் 5 வயது குழந்தையும் அடங்குவர். சுமார் 9 மணி நேரம் அவர்கள் உணவு, நீரின்றி தவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, மேற்கு வங்க அரசின் செயல்பாடுகளை கடுமையாகச் சாடியது. மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வழக்குகளை என்ஐஏ-வுக்கு மாற்றியது.
இந்நிலையில் என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்றத்தின் ஏப்ரல் 6ம் தேதி உத்தரவின்படி, மால்டா மாவட்டத்தின் மோதாபரி காவல் நிலையத்தில் 7 வழக்குகளும், காலியாசக் காவல் நிலையத்தில் 5 வழக்குகளும் என மொத்தம் 12 எப்ஐஆர் மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளது.