இந்தியா

பிஹார் பங்கிபூர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பிரசாந்த் கிஷோர் கூறியது என்ன?

வாக்கு வித்தியாசம் 19,324

வேட்டையன்

பாட்னா: பிஹார் மாநிலம் பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் 19,324 வாக்குகளில் வெற்றி அமோக பெற்றார்.

பல்வேறு தேர்தல்களில் பல அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக அமைப்பாளராக பணியாற்றியவர் பிரசாந்த் கிஷோர். பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 2024-ல் ஜன் சுராஜ் கட்சியை நிறுவினார். இந்நிலையில், பங்கிபூர் தொகுதியின் இடைத்தேர்தலில் அவர் போட்டியிட்டார். அவர் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை.

இந்த தொகுதியில் கடந்த 2010 முதல் 2025 பேரவை தேர்தல் வரையில் தற்போதைய பாஜக தேசியத் தலைவரான நிதின் நவீன், தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்தார். பாஜகவின் கோட்டையாகத் திகழும் பங்கிபூர் தொகுதியில் கடந்த (2025) தேர்தலில் வென்ற நிதின் நவீன், சமீபத்தில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், பங்கிபூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். கடந்த ஆண்டு நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களம் கண்டது ஜன் சுராஜ் கட்சி. அப்போது அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியடைந்த அந்த கட்சி, வெறும் 3.34 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. அப்போது பிரசாந்த் கிஷோர் போட்டியிடவில்லை. அதுதான் அக்கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டது.

இந்தச் சூழலில் பங்கிபூர் இடைத்தேர்தலில் அவர் களம் கண்ட காரணத்தால், பாஜக மற்றும் ஜன் சுராஜ் கட்சி இடையிலான போட்டி பலமானது.

இந்நிலையில், பங்கிபூர் தொகுதியில் 64,151 வாக்குகள் பெற்று பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹா, 44,827 வாக்குகள் பெற்றார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 19,324 வாக்குகள்.

“அடுத்த மூன்று மாதங்களில் பங்கிபூர் தொகுதியில் ஏற்பாடும் மாற்றத்தை நீங்கள் காணலாம். அதற்கு எனக்கு மூன்று மாத காலம் அவகாசம் தேவை. பங்கிபூர் தொகுதி மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த பிஹார் மக்களும் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். நான் இங்கு அசாதாரணமான சாதனை எதையும் செய்யவில்லை. இருப்பினும் 30 நாட்களில் பாஜகவில் 30 ஆண்டுகால ஆதிக்கத்தை தகர்த்துள்ளேன்.

பாஜக தலைமைக்கு பிஹார் மக்கள் ஒரு செய்தியை இந்த தேர்தலின் முடிவு மூலம் தெரிவித்துள்ளனர். நல்ல மனிதர் ஒருவரை பிஹார் முதல்வராக அரியணை ஏற்ற தாங்கள் தயார் என தெரிவித்துள்ளனர். குற்றப்பின்னணி கொண்டவர் பிஹாரை வழிநடத்த மக்கள் விரும்பவில்லை. எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி” என்று வெற்றிக்கு பிறகு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் தாக்கம் பங்கிபூர் தேர்தல் முடிவில் எதிரொலித்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளார். குறிப்பாக ‘ஜென்ஸீ’ இளம் தலைமுறை வாக்காளர்களின் ஆதரவு பிரசாந்த் கிஷோருக்கு இருந்ததாக தகவல். இந்நிலையில், பிரசாந்த் கிஷோருக்கு பிஹார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT