16 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட மாணவர் தலைவர் தேவேந்திர மஹ்தோ
ராஞ்சி: ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (JSSC-CGL) தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தலைமைச் செயலகத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததை அடுத்து, அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று இரவு அறிவித்தார்.
மேலும், மாநில தேர்வுகளில் சீர்திருத்தங்களை பரிந்துரைக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமிதாப் கவுஷல் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து, 16 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர் தலைவர் தேவேந்திர மஹ்தோ திங்கட்கிழமை நள்ளிரவில் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
அதேசமயம் இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற முக்கிய கோரிக்கை ஏற்கப்படாததைக் கண்டித்து, மற்ற ஐந்து பேர் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஜார்க்கண்ட் தலைமைச் செயலகத்திற்கு வெளியே இன்று (ஆகஸ்ட் 18) போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அரசின் இந்த முடிவால் தங்கள் வேலைவாய்ப்பு பறிபோய்விடுமோ என்று அஞ்சுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
முறைகேடு புகார்கள் குறித்த விசாரணைக்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும், ஆனால் தங்களுக்கு நியாயமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தற்போது அரசு ஊழியர்களாக உள்ள தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் வலியுறுத்துகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் JSSC-CGL தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என இரு தரப்பினரும் இப்போது சிபிஐ விசாரணையை கோருகின்றனர். தேர்ச்சி பெற்றவர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை நாடலாம் என்று உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் சுதிவ்யா குமார் கூறியுள்ளார்.